எஸ்.பி.வேலுமணி நேர்மையானவராக இருந்தால் சோதனை பற்றி கவலைப்படத் தேவையில்லை: கம்யூனிஸ்ட் கருத்து

எஸ்.பி.வேலுமணி நேர்மையானவராக இருந்தால் சோதனை பற்றி கவலைப்படத் தேவையில்லை: கம்யூனிஸ்ட் கருத்து
Updated on
1 min read

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேர்மையானவராக இருந்தால் சோதனையைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் ந.பெரியசாமி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் இன்று (ஆக.10) செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

''மாதக்கணக்கில் போராடி வரும் விவசாயிகளின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததோடு, நாடாளுமன்றத்திலும் அது குறித்து விவாதிக்காதது கண்டனத்துக்கு உரியது. செல்போன் ஒட்டுக் கேட்கும் மத்திய அரசின் செயல் ஜனநாயகத்துக்கு விரோதமானது. இத்தகைய செயலில் ஈடுபட்டு வரும் மத்திய அரசுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்கும் பணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் ஆக.23-ம் தேதியில் இருந்து 27-ம் தேதி வரை மக்கள் நாடாளுமன்றத்தை கூட்டி, பிரச்சினைகளைப் பட்டியலிட்டு மத்திய அரசின் துறைச் செயலாளர்களுக்கு அனுப்ப உள்ளோம். தமிழக நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் 33 சதவீத நிதியை மத்திய அரசு பறித்து வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மாநில உரிமைகளை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது.

ஒரு அரசு கடன் வாங்குவதில் தவறில்லை. ஆனால், வாங்கிய கடனை ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல் பெரு முதலாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தியதைத்தான் எதிர்க்கிறோம். வேளாண் துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதை வரவேற்கிறோம். வேளாண் துறையை லாபம் ஈட்டும் துறையாக மாற்ற வேண்டுமெனில் எஸ்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையைச் செயல்படுத்த வேண்டும்.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து இருப்பதாக சந்தேகம் ஏற்படுமேயானால், அதை ஆய்வு செய்வது இயல்புதான். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடத்துவதை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகச் செய்கிறார்கள் என்று சொல்வது சரியல்ல. ஒருவேளை அவர் நேர்மையாக இருந்திருந்தால் அவர் இந்த சோதனையைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

தேசியமயாக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் உள்ள விவசாயக் கடனை நேரடியாக மாநில அரசு தள்ளுபடி செய்ய இயலாது. எனினும், தள்ளுபடி செய்ய வேண்டும் என நிர்ப்பந்திக்கும் செயலை வேண்டுமென்றால் மாநில அரசு செய்யலாம்.

தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நெல் கொள்முதலுக்குத் தேவையான கட்டமைப்புகளை அரசு ஏற்படுத்த வேண்டும்''.

இவ்வாறு ந.பெரியசாமி தெரிவித்தார்.

அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மு.மாதவன், துணை செயலாளர் கே.ஆர்.தர்மராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in