

நூறு நாள் வேலைத் திட்டம் அருமையானது, ஆனால் அந்தத் திட்டத்தின் பணியாளர்கள் வேலை செய்யாமல் மரத்தடியில் அமர்ந்து பேசி, பொழுது போக்குவது கேவலமானது என உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
மதுரை பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் நீதிபதிகள் என்.கிருபாகரனுக்கு மதுரை காந்திய மியூசியத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவுக்கு நீதிபதி பி.புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல்வாழ்வுச் சங்கத் தலைவர் எஸ்.பூபதி வரவேற்றார். பாரா ஒலிம்பிக் விளையாட்டுச் சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கு.சாமிதுரை வரவேற்றார்.
இதில் நீதிபதி கிருபாகரன் பேசியதாவது:
இந்தியாவுக்குச் சுதந்திரம் சும்மா கிடைத்துவிடவில்லை. அடிபட்டு, மிதிபட்டு, ரத்தம் சிந்தி, சிறை சென்று பெற்றதுதான் சுதந்திரம். அந்த சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. அந்தக் கடமையில் யாரும் தவறக்கூடாது. ஒவ்வொரு துறைகளில் இருப்பவர்களும் அவர்கள் துறையில் சரியாகப் பணிபுரிவதுதான் கடமை. தற்போது யாரும் கடமையைப் பற்றிப் பேசுவதில்லை. உரிமை பற்றித்தான் பேசுகிறார்கள்.
நாட்டிற்கு எப்படிச் சுதந்திரம் கிடைத்தது என்பதை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்லாததால் தேவையற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. மாற்றுத்திறனாளி வீரர்கள் விளையாட்டுகளில் பல்வேறு சாதனைகள் புரிகின்றனர். மாற்றுத் திறனாளிகளை உயர்ந்த திறனாளிகள் என்றே அழைக்க வேண்டும்.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு தங்கப் பதக்கம் மட்டுமே பெற்றது வெட்கக்கேடானது. அரசு, இளைஞர்களைக் கண்டுபிடித்து உரிய பயிற்சி அளித்திருந்தால் சர்வதேச அளவில் கொடிகட்டிப் பறந்திருப்போம். பதக்கப் பட்டியலில் 48-வது இடத்தில் உள்ளோம்.
7 பதக்கம் மட்டுமே பெற்றுள்ளோம். சீனாவுக்கு இணையான மக்கள் தொகை இருந்தும், அந்த நாடு அளவுக்கு பதக்கம் பெற முடியாதது வேதனையானது. எங்கோ தவறு நடந்துள்ளது. அடுத்த ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் தங்கப் பதக்கத்துடன் வரவேண்டும் என அரசும், இளைஞர்களும் நினைக்க வேண்டும். இளைஞர்கள் பாதை மாறி பயணிக்கின்றனர். போதை மற்றும் டாஸ்மாக் கடைகளில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர்.
தமிழகத்தில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லை. உணவகத்தில் தட்டுக் கழுவ மணிப்பூரில் இருந்து ஆட்கள் வர வேண்டியுள்ளது. நூறு நாள் வேலைத் திட்டம் அருமையானது. ஆனால் வேலை செய்யாமல் மரத்தடியில் அமர்ந்து பேசி, பொழுது போக்குகின்றனர். இது மிகவும் கேவலமானது.
தமிழகத்தில் உழைக்க யாரும் முன்வருவதில்லை. அனைத்தும் இலவசமாகக் கிடைக்க வேண்டும் என நினைக்கின்றனர். வெளி மாநிலத் தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்துக்கு அதிகம் உழைக்கின்றனர். நம்மவர்கள் அதிகக் கூலி கொடுத்தும் வேலை பார்ப்பதில்லை. அவர்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்பதைப் பார்க்கத் தனி ஆள் போட வேண்டியதுள்ளது. இதைத் தொடர விட்டால் வெளி மாநிலத் தொழிலாளர்கள் முதலாளிகளாக இருப்பார்கள். அடுத்த தலைமுறையினர் அவர்களிடம் கூலியாட்களாக இருப்பார்கள். கடுமையாக உழைத்தால் மட்டுமே சுதந்திரத்தின் பலனை அடைய முடியும்.
தமிழ் பேசுபவர்கள், தமிழில் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் தெரியாது எனப் பெருமையுடன் கூறும் நிலை வந்துவிட்டது. தாய் மொழி ஒவ்வொருக்கும் அவசியம். தாய் மொழி தெரியாமல் எத்தனை மொழி தெரிந்து இருந்தாலும் நல்ல மனிதனாக இருக்க முடியாது. தமிழைக் கற்பித்தால் மட்டுமே செம்மொழியை அடுத்த தலைமுறைக்குச் சென்று சேர்க்க முடியும். இல்லாவிட்டால் கடமையிலிருந்து தவறியதாக ஆகும்.
இவ்வாறு நீதிபதி கிருபாகரன் பேசினார்.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ஆர்.காந்தி, காந்தி நினைவு அருங்காட்சியக இயக்குனர் கே.ஆர்.நந்தாராவ் உள்படப் பலர் பேசினர்.