வெள்ளை அறிக்கை: குடும்ப கடன் ரூ.2.63 லட்சத்தை செலுத்த வந்த இளைஞர்

கடனை செலுத்த வந்த இளைஞர்.
கடனை செலுத்த வந்த இளைஞர்.
Updated on
1 min read

தமிழக அரசின் வெள்ளை அறிக்கைப்படி ரூ. 2.63 லட்சம் குடும்ப கடன் தொகையை செலுத்துவதற்காக, நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு காந்தி வேடமிட்டு இளைஞர் ஒருவர் வந்தார்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (ஆக. 09) அரசின் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட்டார். இதில், தமிழக அரசுக்கு ரூ. 5.70 லட்சம் கோடி கடன் சுமை இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.2,63,976 கடன் இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டைமேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரமேஷ் என்பவர் முதல் நபராக தனது குடும்பத்துக்கான கடன் தொகையை காசோலை மூலம் செலுத்துவதற்காக காந்தி போல் வேடமணிந்து நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கோட்டாட்சியர் எம். கோட்டைக்குமாரை சந்தித்த அவர் தான் வைத்திருந்த ரூ.2,63,976-க்கான வங்கிக் காசோலையை அளித்தார்.

எனினும், அதனை வாங்க மறுத்த கோட்டாட்சியர் கோட்டைக்குமார் அந்த காசோலையை பெறுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை, உயரதிகாரிகளிடம் அதை வழங்கும்படி அறிவுறுத்தினார். இதையடுத்து, அலுவலகத்திலிருந்து வெளியே வந்த ரமேஷ், இக்காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் அனைவரும் அரசு வைத்துள்ள கடனை திருப்பி செலுத்த வேண்டும்.

அப்படி செலுத்துபவர்களுக்கு சுய தொழில் தொடங்க அரசு வங்கி மூலம் ரூ.15 லட்சம் திருப்பிச் செலுத்தக்கூடிய கடன் வழங்க வேண்டும், இதன்மூலம் பொதுமக்கள் சுய தொழில் செய்து பொருளாதார ரீதியாக முன்னேறுவற்கு வாய்ப்பாக அமையும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in