சர்ச்சைப் பேச்சு: பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன் 

சர்ச்சைப் பேச்சு: பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன் 
Updated on
1 min read

பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா. இவர் அருமனையில் கடந்த மாதம் 18-ம் தேதி கிறிஸ்தவ, இஸ்லாமியக் கூட்டமைப்பு சார்பில் பழங்குடியின மக்களுக்காகப் போராடி உயிரிழந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பேசும்போது, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, மாநில அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோர் குறித்துக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

இவரது பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கேட்டு ஜார்ஜ் பொன்னையா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

பின்னர் நீதிபதி, ''மனுதாரரின் வயது, இதய நோயாளியாக இருப்பதைக் கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும். வரும் காலங்களில் மதம், அரசியல் பிரச்சினைகளைத் தூண்டும் வகையில், அமைதியைக் குலைக்கும் வகையில் பேசக்கூடாது. இது தொடர்பாக மனுதாரர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in