முன்னாள்‌ அமைச்சர்களைக் குறிவைத்துப் பழிவாங்குவதா?- அதிமுக கடும் கண்டனம்

முன்னாள்‌ அமைச்சர்களைக் குறிவைத்துப் பழிவாங்குவதா?- அதிமுக கடும் கண்டனம்
Updated on
1 min read

அதிமுக முன்னாள்‌ அமைச்சர்களைக்‌ குறிவைத்துப்‌ பழிவாங்கும்‌ நடவடிக்கைகளில்‌ ஈடுபட வேண்டாம்‌. மக்கள்‌ நலன்‌ காக்கும்‌ பணிகளில்‌ கவனம்‌ செலுத்துங்கள்‌ என்று அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்‌செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்‌ எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

''அதிமுக அமைப்புச்‌ செயலாளர்‌, கோவை புறநகர்‌ தெற்கு மாவட்டச்‌ செயலாளர்‌, சட்டப்பேரவை எதிர்க்கட்சிக்‌ கொறடா, முன்னாள்‌ அமைச்சர்‌ எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களிலும்‌, அவருடன்‌ தொடர்பில்‌ இருப்பவர்கள்‌ ஒருசிலரின்‌ இடங்களிலும்‌ லஞ்ச ஒழிப்புத்‌ துறை சோதனை நடத்துவதாகச் செய்திகள் வருகின்றன. இதனால், திமுக அரசு மக்கள்‌ நலப்‌ பணிகளில்‌ முழு கவனம்‌ செலுத்தாமல்‌, அதிமுகவினரைப் பழிவாங்கும்‌ நடவடிக்கைகளில்‌ அக்கறை காட்டுகிறேதா என்ற ஐயப்பாடும்‌, வருத்தமும்‌ மனதில்‌ எழுகின்றது.

துடிப்பான அதிமுக செயல்வீரர்‌ எஸ்.பி.வேலுமணி மீது தொடர்ந்து அவதூறு பரப்பும்‌ வகையில்‌ திட்டமிட்டு பொய்க்‌ குற்றச்சாட்டுகள்‌ கூறப்பட்டு வந்த நிலையில்‌, இன்றைய சோதனைகள்‌ கண்டிக்கத்தக்கவை என்றே கருதுகிறோம்‌.

அதிமுக முன்னாள்‌ அமைச்சர்கள்‌ மீது சுமத்தப்படும்‌ பொய்க்‌ குற்றச்சாட்டுகள்‌ அனைத்தையும்‌ சட்ட ரீதியாகவும்‌, அரசியல்‌ ரீதியாகவும்‌ சந்திக்க, அதிமுக எப்பொழுதும்‌ தயாராகவே உள்ளது. ஆனால்‌, ஆதாரம்‌ ஏதுமின்றி, உண்மை என்ன என்பதைக் கண்டுபிடிக்கும்‌ முன்னரே ஊழல்‌ பழி சுமத்துவது நியாயமற்றது.

இத்தகைய சோதனைகள்‌ அனைத்தையும்‌ தாங்கி நின்று, அதிமுக மக்கள்‌ பணியில்‌ தொடர்ந்து ஈடுபடும்‌. அன்பு வழியிலும்‌, அற வழியிலும்‌ அரசியல்‌ தொண்டாற்றும்''‌.

இவ்வாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in