

தமிழகத்தில் வாக்காளர் பட்டிய லில் உள்ள போலி வாக்காளர் களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையரிடம் திமுக எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த 20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 5 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 40 லட்சம் வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். போலி வாக் காளர்களை பட்டியலில் இருந்து நீக்க வலியுறுத்தி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதியை கனிமொழி தலைமையில் திமுக எம்.பி.க்கள் நேற்று சந்தித்து ஓர் மனு அளித் தனர். அதில், ‘தமிழகத்தில் வெளி யிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் போலியாக 40 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கு வதால் போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளனர்.