

போலீஸார் 150 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய துப்பாக்கிகள், கண்ணீர் புகை குண்டுகள், தோட்டாக்கள், பீரங்கிகள் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட அரிய பொருட்கள் அடங்கிய பிரம்மாண்ட காவல் அருங்காட்சியகம் சென்னைஎழும்பூரில் தயாராகி வருகிறது. இதன் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சியில் கடந்த 1842-ம் ஆண்டு மே 1-ம் தேதி முதல் எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள கட்டிடத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் செயல்படத் தொடங்கியது. அருணகிரி முதலியார் என்பவருக்கு சொந்தமான 38 ஆயிரம் சதுர அடிபரப்பளவு கொண்ட இந்த பிரம்மாண்ட வளாகத்துக்கு மாதவாடகையாக ரூ.165 நிர்ணயிக்கப்பட்டது. 1856-ல் சென்னை மாநகரின் முதல் காவல் ஆணையராக லெப்டினன்ட் கர்னல் பவுல்டர்சன் பதவியேற்றதும், இந்த வளாகம் ரூ.21 ஆயிரம் கட்டணம் செலுத்தி 199ஆண்டு குத்தகைக்கு எடுக்கப்பட்டது.
2013-ல் வேப்பேரி நெடுஞ்சாலையில் புதிய கட்டிடம் கட்டப்பட்ட பிறகு, காவல் ஆணையர் அலுவலகம் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால், எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது.
கூடுதல் ஆணையரின் முயற்சி
இந்நிலையில், சென்னை மாநகர தலைமையிட கூடுதல் ஆணையராக அமல்ராஜ் கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். பழைய காவல் ஆணையர் அலுவலகம், காவலர் குடியிருப்புகள் ஆகியவை இவரது கட்டுப்பாட்டில் வந்தன. பழைய காவல் ஆணையர் அலுவலகத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், ‘170 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க இந்த கட்டிடத்தை புதுப்பித்து காவல் அருங்காட்சியகமாக மாற்றினால், நாட்டிலேயே பிரம்மாண்டமானதாக இருக்கும்’ என்று அப்போதைய டிஜிபி ஜே.கே.திரிபாதி மற்றும் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார். அவர்களும் இதற்கு ஒப்புதல் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, காவலர் வீட்டுவசதி வாரியம் மூலம் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு, பழமை மாறாமல் காவல் ஆணையர் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்கள், ராணுவ கேந்திரங்களில் உள்ள பீரங்கிகள், துப்பாக்கிகள், போலீஸ் உடைகள் போன்றவற்றை அந்தந்த மாநில காவல் துறை உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு அமல்ராஜ் சேகரித்தார்.
காவல் துறையில் கடந்த 150 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட பிஸ்டல், ரிவால்வர் முதல் நவீன ஏகே ரக துப்பாக்கிகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்ட பண்டையகால சிலைகள், பதப்படுத்தப்பட்ட புலியின் உருவம்,காவலர் இசைக் குழுவினர் பயன்படுத்தும் இசைக் கருவிகள், கண்ணீர் புகை குண்டு வீசும் கருவிகள், பழைய கேமராக்கள், வாக்கிடாக்கி உட்பட போலீஸார் பயன்படுத்தும் பல தகவல் தொடர்பு கருவிகள், போலீஸார் பயன்படுத்திய பழைய பைக்குகள், குண்டு துளைக்காத கார்கள் என்று பல பொருட்கள் சேகரிக்கப்பட்டு, இங்கு வைக்கப்பட்டுள்ளன.நாட்டிலேயே முதலாவது பிரம்மாண்ட காவல் துறை அருங்காட்சியகமாக இது உருவாக்கப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. சில மாதங்களில் பணி முடிந்து, மக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது.