Last Updated : 17 Feb, 2016 08:33 AM

 

Published : 17 Feb 2016 08:33 AM
Last Updated : 17 Feb 2016 08:33 AM

என்ன செய்யப்போகிறார் வாசன்?- மற்ற கட்சிகளின் முடிவுக்காக காத்திருப்பு

கடந்த 1996-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலின்போது கூட்டணி அமைக்கும் முயற்சிக ளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. அப்போதைய ஆளும் கட்சியான அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தொண்டர்கள் இருந்தனர். ஆகவே, அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என மூத்த தலைவரான ஜி.கே.மூப்பனார் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தினார். ஆனால் அவரது வேண்டுகோளை நிராகரித்த காங்கிரஸ் தலைவர் பி.வி.நரசிம்ம ராவ், அதிமுக காங்கிரஸ் உறவு தொடரும் என அறிவித்தார்.

இதன் விளைவாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது. ஜி.கே.மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உரு வெடுத்தது. தமிழகத்தின் பெரும் பாலான காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் மூப்பனார் பின்னால் அணி திரண்டனர்.

திமுகவுடன் தமாகா அணி சேர்ந்தது. 40 சட்டப்பேரவை தொகுதி களில் போட்டியிட்ட அக்கட்சி, 39 தொகுதிகளில் அபார வெற்றி கண்டது. 173 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சி அமைக்க, அதன் தோழமைக் கட்சியான தமாகா பிரதான எதிர்க் கட்சி அந்தஸ்தைப் பெற்றது. அக்கட்சியைச் சேர்ந்த சோ.பாலகிருஷ்ணன் எதிர்க்கட்சித் தலைவரானார்.

மீண்டும் தமாகா

கால ஓட்டத்தில் காங்கிரஸ் கட்சியிலேயே தமாகா மீண்டும் ஐக்கியமானது. மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் செல்வாக்கு மிக்க அமைச்சராக ஜி.கே.வாசன் திகழ்ந்தார். எனினும் காலப்போக்கில் மாற்றம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தொடர்பான நடவடிக்கைகளில் ஜி.கே.வாசன் கருத்துகளுக்கு முக் கியத்துவம் தராமல் காங்கிரஸ் தலைமை நிராகரிப்பதாக வாசன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இந்த அதிருப்தி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்ததன் விளைவாக காங்கி ரஸ் கட்சியில் இருந்து வாசன் வெளியேறினார். 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் உதயமானது.

எனினும் மூப்பனார் தலைமை யில் தமாகா உருவானபோது மத்திய காங்கிரஸ் தலைமைக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்களிடம் நிலவிய கடுங் கோபம் எதுவும் இப்போது காணப் படவில்லை. அதேபோல் மூப்ப னார் தலைமையிலான தமாகாவில் அணிவகுத்த பல தலைவர்கள் கூட, ஜி.கே.வாசன் தலைமையிலான இப்போதைய தமாகாவுக்கு வரவில்லை. அவர்கள் காங்கிரஸ் கட்சியிலேயே தங்கிவிட்டனர்.

அடுத்தது என்ன?

இத்தகைய சூழ்நிலையில் பேரவை தேர்தலை தமாகா எதிர் கொள்கிறது. 2016-ல் அமையும் புதிய சட்டப்பேரவையில் தமது கட்சிக்கு பிரதிநிதித்துவம் கிடைப் பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஜி.கே.வாசன் உள்ளார். ஆகவே, வெற்றி வாய்ப் புள்ள கட்சியுடன் மட்டும் கூட்டணி அமைக்க வேண்டிய அரசியல் நிர்பந்தம் அவருக்கு உள்ளது.

அந்த வகையில் பார்த்தால், திமுகவுடன் காங்கிரஸ் கட்சி உறவைப் புதுப்பித்துள்ள நிலையில் திமுக அணிக்கு தமாகா செல்ல வாய்ப்பே இல்லை. மக்கள் நலக் கூட்டணியுடன் அணி சேர்ந்தால் வெற்றி பெற வாய்ப்பில்லை என தமாகாவினர் கருதுவதால், அவர்களுடனும் கூட்டணி சேர வாய்ப்பு குறைவு. ஆகவே, தமாகா முன் உள்ள ஒரே வாய்ப்பு இப்போது அதிமுக மட்டுமே.

எனினும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான வெளிப் படையான நடவடிக்கைகள் எதுவும் அதிமுகவில் தென்படவில்லை. திமுகவுடன் காங்கிரஸ் அணி சேர்ந்துள்ள நிலையில், விஜய காந்தின் தேமுதிகவும் அந்த அணியில் இடம்பெறக் கூடும் என பரவலாகப் பேசப்படுகிறது. ஒருவேளை அத்தகைய கூட்டணி உருவானால், அந்த அணியானது அதிமுகவுக்கு மிகுந்த சவாலாக மாறும். அத்தகைய தருணத்தில் அதிமுகவும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் உருவாகலாம். அப்படி ஒரு நிலை உருவானால் அதிமுக அணியில் இடம்பெற தமாகாவுக்கு வாய்ப்புள்ளது.

ஆனால், திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் பாஜக வுடனோ அல்லது மக்கள் நலக் கூட்டணியுடனோ தேமுதிக அணி சேர்ந்தால் அதிமுக எதிர்ப்பு ஓட்டுகள் சிதறும் நிலை ஏற் படும். அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற் பட்டால் 2014 நாடாளுமன்றத் தேர்த லைப் போலவே அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டி யிடலாம் என்ற எண்ணம் அதிமுக தலைமைக்கு இருப்பதாகக் கூறப் படுகிறது.

ஒரே வாய்ப்பு

அதிமுக அத்தகைய முடிவு எடுத்தால் அது தமாகாவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மேலும், திமுக, காங்கிரஸ், தேமுதிக அணி அமையும் பட்சத்தில், அதிமுக பாஜக அணி உருவாக லாம் என்ற ஒரு கருத்தும் உலவு கிறது. அதுவும் தமாகாவுக்கு சாதகமானது அல்ல. அப்போது மக்கள் நலக் கூட்டணி மட்டுமே தமாகாவுக்கான ஒரே வாய்ப்பாக அமையும்.

1996 தேர்தலின்போது திடீரென மலர்ந்த தமாகா, திமுகவும் சேர்ந்து தமிழக அரசியல் களத்தையே புரட்டி போட்டதுடன் 39 தொகுதிகளிலும் வென்றது. மேலும், அந்தத் தேர்தலில் அதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு படு தோல்வி கிடைக்க முக்கிய காரண மாக இருந்தது.

ஆனால் 2016 பேரவைத் தேர்த லில் மற்ற கட்சிகள் எல்லாம் கூட் டணி அமைக்கும் வியூகத்தில் தீவிரம் காட்டி வரும் நேரத்தில், சொந்த வியூகம் எதுவுமின்றி மற்ற கட்சிகளின் முடிவுக்காக காத் திருக்க வேண்டிய நிலையில் தமாகா உள்ளது. என்ன செய்யப் போகிறார் ஜி.கே.வாசன்? பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x