ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன; சேலத்தில் மாலை 6 மணிக்கு கடைகள் மூடல்: மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின

சேலத்தில் நேற்று முதல் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து, வீரபாண்டியார் நகரில் கடைகள் மாலை 6 மணிக்கு மூடியபோது, அப்பகுதியில் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்றதால் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. படம்:எஸ்.குரு பிரசாத்
சேலத்தில் நேற்று முதல் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து, வீரபாண்டியார் நகரில் கடைகள் மாலை 6 மணிக்கு மூடியபோது, அப்பகுதியில் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்றதால் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. படம்:எஸ்.குரு பிரசாத்
Updated on
1 min read

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க சேலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளின்படி நேற்று மாலை 6 மணிக்கு கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன.

சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, சேலத்தில் தளர்வுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கில், புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று (9-ம் தேதி) முதல் வரும் 23-ம் தேதி வரை அமலில் இருக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, சேலம் மாநகரில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், மால்கள், சாலையோரப் பூக்கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் தினமும் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்று, சேலம் மாநகரில் கடைகள், செல்போன் கடைகள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவைகள் மாலை 6 மணிக்கு மூடப்பட்டன.

சாலையோரக் கடைகள் அதிகம் உள்ள வஉசி மார்க்கெட், சின்னகடை வீதி உள்ளிட்ட இடங்களில் செயல்படும் பூ மற்றும் பழக்கடைகளும் மூடப்பட்டன. மொத்த விற்பனை கடைகள் உள்ள செவ்வாய்பேட்டை மெயின்ரோடு, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி ரோடு, பால் மார்க்கெட், லீபஜார், வீரபாண்டியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகளும் மாலை 6 மணிக்கு மூடப்பட்டன. சேலத்தில் உள்ள 65 டாஸ்மாக் கடைகளும் மாலை 6 மணிக்கு மூடப்பட்டன.

உணவகங்கள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் மட்டுமே திறந்திருந்தன. நகரிலுள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டதால், முக்கிய சாலைகளில் இரவு 8 மணிக்கு மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்து, பல சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், சேலம் நகரப் பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் குறைந்தது. ஊரகப் பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படாததால், அங்கு வழக்கமான செயல்பாடுகள் தடையின்றி நடைபெற்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in