

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறையைக் கண்டித்து நாளை (பிப்ரவரி 11) ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்த அகில இந்திய தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தென் மண்டல தலைவர் அனந்த பத்மநாபன் நேற்று சென்னையில் கூறியதாவது:
வாடிக்கையாளர்கள் ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் அதிகமான தொகைக்கு நகைகளை வாங்கும்போது பான் கார்டை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என ஜனவரி மாதம் முதல் புதிய விதிமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திடீர் கட்டுப்பாடு காரணமாக நகை விற்பனை தொழில் 30 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு பான் கார்டு இல்லாததால் எங்களிடம் நகை வாங்க வருவதில்லை. இதனால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் கள்ளச் சந்தை விற்பனை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்கள், ஊழியர்கள், உப தொழில் செய்பவர்கள் சுமார் 7 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். இந்த புதிய உத்தரவை கைவிடக்கோரி மத்திய நிதி அமைச்சர், நிதித்துறைச் செயலர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்து ஜனவரி 18 அன்று மெழுகுவர்த்தி ஏற்றி ஊர்வலம் நடத்தினோம்.
இதே கோரிக்கையை வலி யுறுத்தி பிப்ரவரி 11 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள சுமார் 35 ஆயிரம் நகைக் கடைகளை பூட்டி, முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தவிருக்கிறோம். மத்திய அரசு விரைவில் தனது முடிவை கைவிடவில்லையெனில் அடுத்த கட்டமாக தீவிரப் போராட்டத்தை அறிவிப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.