

மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அரசு பஸ்களில் பயணம் செய்ய இலவச பாஸ் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதல்கட்டமாக சென்னை மாநகர பஸ்களில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டம் செயல் படுத்தப்படும் என்று கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். அதற்கு அடையாளமாக 5 மூத்த குடிமக்களுக்கு இலவச டோக்கன்கள், அடையாள அட்டை களை முதல்வர் வழங்கினார்.
இத்திட்டத்தின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் குளிர் சாதன வசதி இல்லாத சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத் தின் அனைத்து பஸ்களிலும் கட்டணமில்லாமல் பயணம் செய் யலாம். இதற்கென மாதத்துக்கு 10 டோக்கன்கள் வழங்கப்படும். நடத்துநரிடம் இந்த டோக்கன்களை கொடுத்து கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம்.
இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர், இதற்கான விண்ணப்பப் படிவத்தை சென்னை மாநகர போக்குவரத்துக் கழக இணையதளத்தில் இருந்து (www.mtcbus.org) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது இணையதளத்தில் குறிப்பிடப்பட் டுள்ள பஸ் டெப்போக்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பத்தை எப்போது வேண்டுமானாலும் மூத்த குடிமக்கள் அளிக்கலாம். விண்ணப் பங்கள் கொடுப்பதற்கென கடைசி தேதி என்று எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போக்களில் கொடுத்து அடையாள அட்டை, டோக்கன்களை பெற்றுக் கொள்ள லாம். எந்தெந்த பஸ் டெப்போக் களில் இந்த வசதி செய்யப்பட்டுள் ளது என்ற விவரம் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக இணையதளத்தில் வெளியிடப்பட் டுள்ளது.
திட்ட தொடக்க நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தங்கமணி, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சங்கர், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் பாலகிருஷ்ணசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண் டனர்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.