

எந்த வாக்குறுதியையும் நாங்கள் நிறைவேற்றாமல் இருக்க மாட்டோம் என, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
இதையடுத்து, அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, "தமிழகத்தின் நிதிநிலைமை எப்போது சரியாகும் என என்னால் தேதி சொல்ல முடியாது. இந்த 5 ஆண்டு ஆட்சிக்குள் சரிசெய்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தல் வாக்குறுதியில் இருந்து நழுவவோ, திசைத்திருப்பவோ இந்த வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை. ஆட்சிக்கு வந்ததும் கரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கினோம். வாக்குறுதியில் சொல்லப்படாத 16 வகையான மளிகை பொருட்களையும் கொடுத்தோம்.
எந்த வாக்குறுதியையும் நாங்கள் நிறைவேற்றாமல் இருக்க மாட்டோம். சொன்ன வார்த்தையை மாறாமல் செய்வோம். திருச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட தொலைநோக்கு திட்டங்கள் 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.
தமிழகம் பணக்கார மாநிலம். இந்தியாவை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகத்தில் அளவில்லா சொத்துக்கள் உள்ளன. முறையாக ஆட்சி நடத்தினால் வருவாயைப் பெருக்க முடியும். உறுதியாக உட்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் வருவாயை பெருக்க முடியும்.
கடன் வாங்குவது என்பது தவறு அல்ல. எதற்காக கடன் வாங்கப்படுகிறது, யாரிடம் அது செல்கிறது என்பதே முக்கியம். வாங்குகின்ற கடனை ஊழலின்றி முதலீடு செய்தால், நஷ்டம் ஏற்படாது . முதலீட்டுக்காக அல்லாமல், வருவாய்க்காக கடன் வாங்கினால் மேலும் செலவினம் அதிகரிக்கும்.
வாங்கும் கடனில் 50% மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது என்பதை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டுள்ளார். வரி ஏய்ப்புகளை சரிசெய்தாலே வருவாயை பெருக்க முடியும். கடனை மானியங்களுக்காக செலவிட்டால் வட்டி அதிகரித்து கடன் சுமையும் உயரும்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.