

நானே தன்னம்பிக்கையை இழக்கும் அளவுக்கு கடந்த ஆட்சியில் நிர்வாக மேலாண்மை இருந்தது என, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:
"முந்தைய ஆட்சிக் காலத்தில் ரூ.1 லட்சம் கோடி தவறான செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தவறான நிர்வாகத் திறமையின்மையால் தமிழகத்தில் ரூ.1 லட்சம் கோடி வேறு இடங்களுக்குச் சென்றுள்ளது.
சிஸ்டமே தவறாக இருக்கிறது. 5 ஆண்டுகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் கொஞ்சநஞ்சமல்ல. எனக்கே வியப்பைத் தருகிறது. நானே தன்னம்பிக்கையை இழக்கும் அளவுக்கு கடந்த ஆட்சியில் நிர்வாக மேலாண்மை இருந்தது. சீரிய மேலாண்மை இருந்தால் இதனைச் சரிசெய்ய முடியும் என்ற உதாரணம் நமக்கு வரலாறாக இருக்கிறது. எனவே இதனைச் சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் சரிவு வரவில்லை. கடந்த ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் இந்தச் சரிவு வந்திருக்கிறது.
குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் யார், எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் வதந்தி பரப்புவார்கள். ஆனால், அதில் நன்மைதான் உள்ளது.
மக்களுடைய நம்பிக்கையும் புரிதலும் இருந்தால் இதனைத் திருத்தி சரியான நிலைக்குத் தமிழகத்தைச் சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தமிழகத்தை முன்னுதாரணமாகக் கொண்டுவருவதற்கு திட்டமிட்டு சூழலை உருவாக்க வேண்டும். பொருளாதாரத்தைச் சீர்படுத்துவது என்பது அதிரடியான மாற்றம் மூலமே சாத்தியம்".
இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.