திமுக அரசு 100 நாட்களில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை: ஈபிஎஸ் விமர்சனம்

ஈபிஎஸ்: கோப்புப்படம்
ஈபிஎஸ்: கோப்புப்படம்
Updated on
1 min read

திமுக அரசு 100 நாட்களில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று (ஆக. 09) எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது:

''திமுக அரசு 100 நாட்கள் கழித்துதான் சட்டப்பேரவையையே கூட்டுகிறது. அதிமுக அரசு வகுத்த திட்டங்களுக்குத்தான் திமுகவினர் அடிக்கல் நாட்டுகின்றனர். கடந்த அரசில் முடிவுற்ற பணிகளைத் திறக்கின்றனர். 100 நாட்களில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

நான் முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை அறிவித்து, சுமார் 9 லட்சத்து 75 ஆயிரம் மனுக்களைப் பெற்று அதில் சுமார் 5 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. அதே நடைமுறையைத்தான் திமுகவும் கடைப்பிடித்தது. ஆனால், அந்த அளவுக்கு மனு வாங்கவும் இல்லை. தீர்வும் காணவில்லை.

100 நாட்களில் மனுக்களுக்குத் தீர்வு காண்போம் என ஏன் சொன்னார்கள்? நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். இன்று வரை நீட் தேர்வுக்கு என்ன தீர்வு கண்டனர்? கமிஷன் அறிக்கை கிடைத்ததும் என்ன செய்தார்கள்? ஒன்றுமே செய்யவில்லையே. பொய்யான வாக்குறுதியை அளித்து ஆட்சியில் அமர்ந்தனர். ஆட்சியில் அமர்ந்ததும் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டனர்.

பெட்ரோல் - டீசல் விலையைக் குறைக்கவில்லை. 505 அறிவிப்புகளுக்கு மேலாக வாக்குறுதிகள் கொடுத்தனர். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாததைக் கண்டித்துதான் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. 14,000 இடங்களில் வரலாற்றில் முதல் முறையாக அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. மக்களின் கொந்தளிப்பு இதில் தெரிகிறது".

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in