

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்கள், மின்சாரத் திருத்தச் சட்டம், தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தம் ஆகியவற்றை எதிர்த்தும், அவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் காரைக்காலில் இன்று (ஆக.9) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், இந்தியத் தொழிற்சங்க மையம் ஆகியவற்றின் சார்பில், காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கச் செயலாளர் ஏ.பழனிவேல் தலைமை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தமீம், புதுச்சேரி மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.வின்சென்ட், தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைத் தலைவர் வே.கு.நிலவழகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளைக் கண்டித்தும் பேசினர்.
போராட்டம் குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஏராளமான விவசாயிகள் 250 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராடி வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடி விவசாயிகளின் போராட்டத்தை அலட்சியம் செய்து வருகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். பிரதமரின் இத்தகைய செயல்பாடுகளுக்கு எதிராக, வெள்ளையனே வெளியேறு இயக்கம் போல, மோடியே வெளியேறு என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவித்தனர்.
விவசாய சங்கங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.