புதுச்சேரியில் 18 மீனவ கிராமங்களில் போராட்டம்: படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றம்

புதுச்சேரியில் 18 மீனவ கிராமங்களில் போராட்டம்: படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றம்
Updated on
1 min read

தேசிய கடல் மீன்வள சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரியில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி, 18 மீனவ கிராமங்களில் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய கடல் மீன்வள சட்ட மசோதாவை எதிர்த்து புதுச்சேரியில் இன்று 18 மீனவ கிராமங்களில் மீன்பிடிக்கச் செல்லாமல் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சோலை நகர் வடக்கு மீனவர் கிராமத்தினர் மீன்பிடிக்கச் செல்லவில்லை. படகுகளில் கறுப்புக் கொடி கட்டி, சோலை நகரில் கறுப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதி மீனவப் பெண்களும் மீன் விற்பனையில் ஈடுபடவில்லை.

இதுபற்றி சோலை நகர் மீனவர்கள் கூறுகையில், "தேசிய கடல் மீன்வள சட்ட மசோதாவினால் மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் முன் அனுமதி வாங்க வேண்டும். குறிப்பிட்ட தொலைவு மட்டுமே மீன்பிடிக்க வேண்டும். மீனவர்களைக் கடலோரக் காவல்படை கண்காணிப்பதுடன், அவர்களின் புதிய விதிகளை மீறியதாகக் கருதினால் படகு, மீன்வலைகளைப் பறிமுதல் செய்யும். தனியாருக்குச் சாதகமான அம்சங்கள்தான் இருக்கிறதே தவிர, மக்களுக்கு ஆதரவாக ஏதும் இல்லை. தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட முடிவு எடுத்துள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.

அப்போது சோலை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கடலில் இறங்கியும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துவந்தனர்.

அதேபோல் விசைப்படகு உரிமையாளர்கள் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. படகுகளில் கறுப்புக் கொடி கட்டியிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in