

தமிழக அரசின் வருமானம் மிகவும் சரிந்துவிட்டது என, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இன்று (ஆக. 09) காலை 11.30 மணியளவில் சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:
"என் பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டாலும் பலர் இதற்கு உறுதுணையாக இருந்தனர். முதல்வர் காட்டிய பாதையில் வந்த அறிக்கை இது. முதல்வர், அவருடைய செயலாளர்கள், முதன்மைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் ஆகியோர் பல திருத்தங்களைச் செய்தனர்.
இந்த அறிக்கை தயாரிப்பின்போது, ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் அறிக்கைகளை ஆய்வு செய்தோம். 2001-ல் அப்போதைய நிதி அமைச்சர் பொன்னையன் தாக்கல் செய்த அறிக்கைகளையும் ஆய்வு செய்தோம்.
அந்த அறிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த அறிக்கை இரு வகைகளில் மாற்றமானது. இது, எல்லாத் தகவல்களும் சேர்ந்து ஒரே நேரத்தில் வெளியிடப்படும் மேக்ரோ எக்கனாமிக் அறிக்கை. கூடுதல் விவரங்கள் உள்ள அறிக்கை. இரண்டாவது இதில், ஒவ்வொரு வாரிய அளவில் தகவல்கள் இல்லை. ஆட்சிக்கு வந்தபின் கரோனா இரண்டாவது அலையை மட்டுப்படுத்துவதிலேயே நேரம் போய்விட்டது. அதனால், வாரிய அளவில், துறை வாரியாகத் தகவல்கள் திரட்ட போதிய நேரம் இல்லை.
பொன்னையன் வெளியிட்ட அறிக்கையில் அவர் பெயர் உள்ளது. ஆந்திராவில் பெயர் இல்லை. இதில், என் பெயர் இருப்பதற்குக் காரணம், இதில் ஏதேனும் தவறு இருந்தால் அதற்குக் காரணம் நான்.
எங்களுடைய தத்துவம், இலக்கைத் தெரிவிப்பதற்காகவும், எந்தத் தகவலை நாங்கள் கேட்டோமோ அதே தகவல்களை நாங்களே வெளியிடுவதற்காகவும் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. மேலும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி இது. அதனை நாங்கள் நிறைவேற்றுகிறோம்.
கடன்களின் நிலை, வருமானம், செலவினம் ஆகியவை எவ்வாறு மாறியுள்ளன, மின்துறை, போக்குவரத்துக் கழகத்தின் சூழல் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில வளர்ச்சி, வேலைவாய்ப்பின்மை குறித்தும் ஆய்வு செய்துள்ளோம்.
வருமானம் இல்லை என்பதுதான் எந்தவொரு மாநிலத்தின் அடிப்படை பிரச்சினை. தமிழகத்தில் அரசுக்கு வரவேண்டிய வருமானம் மிகவும் சரிந்துவிட்டது. வருமானம் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி , நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. தமிழக அரசுக்கான வருமானம் 4-ல் ஒரு பங்கு சரிந்துவிட்டது.
முந்தைய திமுக ஆட்சியில் வருமானம் உபரியாக இருந்தது. 2011-2016-ல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.17,000 கோடி. 2016-2021-ல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்தது. 2020-2021 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடி. இந்தியாவின் எந்தவொரு மாநிலத்தின் வருவாயும் இந்த அளவுக்குச் சரியவில்லை".
இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.