Published : 09 Aug 2021 12:33 PM
Last Updated : 09 Aug 2021 12:33 PM

சென்னையில் ரங்கநாதன் தெரு உட்பட 9 இடங்களில் வணிக வளாகங்கள், கடைகள் திறக்க அனுமதி: கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் வணிக வளாகங்கள், அங்காடிகள் செயல்பட இன்று காலை 6 மணியுடன் முடிந்த நிலையில் அவை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க சென்னை மாநகராட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பிரிக்கில்ன் சாலை வரை, ஜாம்பஜார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோயில் வரை, அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திருவிக நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை உள்ள வணிக வளாகங்கள், அங்காடிகள் கடந்த மாதம் 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை செயல்படத் தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.

இந்தத் தடைக் காலம் முடிவடைந்த நிலையில் தடை விதிக்கப்பட்ட 9 இடங்களில் உள்ள வணிக வளாகங்கள், அங்காடிகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.

எனினும் இப்பகுதிகளில் உள்ள அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் 50%க்கு மேல் மக்கள் கூடக் கூடாது என்றும், வாடிக்கையாளர்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சென்னை சென்னை மாநகராட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x