

கடந்த 1982-ம் ஆண்டுமுதல் ஐக்கிய நாடுகள் சபை ஆகஸ்ட் 9-ம் தேதியை பழங்குடிகள் தினமாக கடைபிடித்து வருகிறது. பழங்குடியினரின் சமூகத்தில் பொருளாதாரம்- சமூக முன்னேற்றம், கலாச்சாரம்- சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்பு, சுகாதாரம் பேணல், மனித உரிமைகள் பாதுகாப்பு, கல்வி வளர்ச்சி ஆகியவற்றுக்கு கூட்டாக பணியாற்ற வேண்டும் என்பதே இந்த தினத்தின் நோக்கம்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள பகல்கோடு மந்தில்தோடரின மக்களின் வாழ்வியலை காட்சிப்படுத்தும் வகையில் கலாச்சார மையம் உருவாகி வருகிறது. அதன்மூலம் பழங்குடியினரின் வாழ்வியல், கலை மற்றும் கலாச்சாரம் பிரதிபலிப்பதாக நீலகிரி மாவட்ட பண்டைய பழங்குடியினர் கூட்டமைப்பின் தலைவர் நார்தே குட்டன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் 36 பண்டைய பழங்குடியின வகுப்புகள் உள்ளன. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டம் நீலகிரி. இங்கு தோடர், கோத்தர்,பனியர், இருளர், குரும்பர் மற்றும் காட்டு நாயக்கர் என 6 வகையான பண்டைய பழங்குடியினர் மொத்தம் 27,032 பேர் வசிக்கின்றனர். இதில், கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பனியரின மக்கள் தொகைதான் அதிகம். சுமார் 15,000 பேர் உள்ளனர். ஒவ்வொரு பழங்குடி இனத்துக்கும் வாழும் இடம், வாழ்வியல் வேறு விதமாக உள்ளது. பழங்குடியின மக்களின் கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், அவர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பாடல்கள்,நடனங்கள், கதைகள் மற்றும் அவர்கள் மேற்கொண்டு வரும் மூலிகை வைத்தியத்தை ஆவணப்படுத்துவது முக்கியம். இந்தாண்டு,கரோனா காலத்தில் பழங்குடியினரின் மூலிகை வைத்தியம் பெருமளவில் கைகொடுத்துள்ளது. எனவே மூலிகை வைத்தியத்தை ஆவணப்படுத்த முக்கியமான காலகட்டம் இது. பழங்குடியின மக்களின் மொழிகளுக்கு எழுத்து வடிவம் பெறவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
எழுத்து வடிவம் பெறுமா?
தமிழகத்தில் உள்ள பல்வேறு பழங்குடியினர் தங்கள் பூர்வீக மொழிகளைப் பேசுகின்றனர். ஒரு சில பழங்குடியின மக்கள் பேசும் தனித்த மொழிகள் குறித்துஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.இம்மொழிகளுக்கு எழுத்து வடிவம் அளிக்கும் பணி இன்னும் முழுமையடையவில்லை. இதுவரை எழுத்து வடிவம் பெறாதபழங்குடிகளின் மொழிக்கு, அரசு போதுமான நிதி ஒதுக்கி அவற்றுக்குஎழுத்து வடிவம் அளிக்க வேண்டும் என்பதே பழங்குடியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.