

கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் அடைக் கப்பட்டுள்ள நிலையில், கட்டுப் பாடுகளை மீறி சுற்றுலாப் பயணிகள் குவிவது கரோனா பரவலுக்கு வழிவகை செய்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் 3-வது அலையைத் தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா, ரோஸ் கார்டன், கோக்கர்ஸ் வாக், குணா குகை, தூண்பாறை, மோயர்பாய்ண்ட், பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஏரியில் படகு சவாரியும் நிறுத்தப் பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகி விட்டது.
இருப்பினும் கொடைக்கா னலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை வார விடுமுறை நாட்களில் அதிகரித்துள்ளது. இவர்கள் மேல் மலை கிராமப் பகுதிகளுக்குச் சென்று திரும்புகின்றனர். இங்கு குறிப்பிட்டுச் சொல்லும்படி காண வேண்டிய கூக்கால் நீர்வீழ்ச்சி, மன்னவனூர் சுற்றுச்சூழல் பூங்கா உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
ஏரிச்சாலையில் மட்டும் சிறு வர்களுக்கான குதிரையேற்றம், சைக்கிள் ஓட்டுதல், பலூன் சுடுதல் ஆகிய பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே உள்ளன. மற்றபடி கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் காண்பதற்கு எந்த இடமும் திறக்கப்படவில்லை.
கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகளால் கரோனா 3-வது அலைக்கு வித்திடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.