Published : 13 Feb 2016 10:21 AM
Last Updated : 13 Feb 2016 10:21 AM

புதுக்கோட்டையில் நாளை பி.யு.சின்னப்பா நூற்றாண்டு விழா: திரைத்துறையினர் பங்கேற்பு

‘புதுக்கோட்டையின் ஆக் ஷன் ஹீரோ’ என்றழைக்கப்பட்ட பி.யு.சின்னப்பாவின் நூற்றாண்டு விழா நாளை (பிப்ரவரி 14) புதுக்கோட்டையில் நடைபெறுகி றது. இதில், திரைத் துறையினர் பங்கேற்கின்றனர்.

புதுக்கோட்டை உலகநாத பிள்ளை, மீனாட்சி அம்மாள் ஆகியோரது மகன் பி.யு.சின்னப்பா. 1916 மே 5-ம் தேதி பிறந்த இவர், 5 வயதிலேயே தனது தந்தையுடன் நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார். நாடக மேடைகளில் சின்னப்பாவுடன், எம்ஜிஆர், எம்.ஜி.சக்கரபாணி, காளி என்.ரத்தினம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

புராண மற்றும் சமூக நாடகங்களில் நடித்த சின்னப்பா, சுருதி குறையாமல் பாடும் திறன் கொண்டவர். மேலும், சிலம்பம், குத்துச்சண்டை ஆகியவற்றைக் கற்று, அவற்றை நாடக மேடைகளில் வெளிப்படுத்தினார்.

முதன்முதலாக பாரதியார் பாடல்களை திரையில் பாடியவர், முதன்முதலாக இரட்டை வேடத் தில் நடித்தவர் என்ற பெருமைக்கு உரியவர் சின்னப்பா. ‘சவுக்கடி சந்திரகாந்தா’, ‘ராஜ மோகன்’, ‘பஞ்சகேசரி’, ‘அநாதைப் பெண்’, ‘யயாதி’, ‘மாத்ரு பூமி’, ‘உத்தம புத்திரன்’, ‘தயாளன்’, ‘தர்மவீரன்’, ‘ஆர்யமாலா’, ‘மனோன்மணி’, ‘பிரித்திவிராஜன்’, ‘கண்ணகி’, ‘குபேர குசேலா’, ‘ஹரிச்சந்திரா’, ‘ஜெகதலப்பிரதாபன்’, ‘மகாமாயா’, ‘அர்த்தனாரி’, ‘விகடயோகி’, ’துளசி ஜலந்தர்’, ‘கிருஷ்ண பக்தி’, ‘மங்கையர்க்கரசி’, ‘ரத்னகுமார்’, ‘வனசுந்தரி’, ‘சுதர்சன்’ உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். ‘உத்தமபுத்திரன்’ படத்தில் இவருக்கு இரட்டை வேடம். ‘மங்கையர்க்கரசி’ திரைப்படத்தில் அந்தக் காலத்திலேயே மூன்று வேடம் தரித்து நடித்து புகழ்பெற்ற இவர், இதன் அடுத்தபடியாக ‘ஜெகதலப்பிரதாபன்’ என்ற திரைப்படத்தில் ஐந்து வேடங்களை ஏற்று, ஒவ்வோரு பாத்திரத்துக்கும் வெவ்வேறு வசன உச்சரிப்பு, உடல்மொழி என்று வித்தியாசம் காட்டி அசத்தலாக நடித்தார்.

நாடகம் மற்றும் சினிமா துறையில் பெரும் புகழ்பெற்ற பி.யுசின்னப்பா, அவரது 35-வது வயதில், 1951-ம் ஆண்டில் உயிரிழந்தார். புதுக்கோட்டை சின்னப்பா நகரில் உள்ள அவரது நினைவிடம் பராமரிப்பும் பாதுகாப்பும் இன்றி காணப்படுகிறது. புதுக்குளம் அருகே சின்னப்பா பெயரில் பூங்கா உள்ளது.

இந்நிலையில், அவரது நூற்றாண்டு விழா புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள நகர்மன்ற அரங்கில், நாளை (14.2.2016) காலை 10 மணிக்குத் தொடங்கி, நாள் முழுவதும் நடைபெற உள்ளது.

இதுகுறித்து அவரது உறவினர்களில் ஒருவரான, ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் வி.கனகராஜன் கூறியபோது, “நூற்றாண்டு விழாவில் பி.யு.சின்னப்பா அவர்களின் பெருமைகளை எடுத்துச்சொல்லும் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் வெளியிடப்பட உள்ளது. அன்று காலை வாழ்வியல் கலந்தாய்வும், மாலையில் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள், நடிகர்கள் மற்றும் திரைத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள் பலரும் பங்கேற்று பி.யு.சின்னப்பாவுக்கு பெருமை சேர்க்க உள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x