Published : 28 Feb 2016 12:39 PM
Last Updated : 28 Feb 2016 12:39 PM

‘ஏவூர் பாபு என்றார்கள்... இழுத்துச் சென்றார்கள்...’ - ஆந்திர சிறையில் இருந்து விடுதலையான தமிழர்கள் கண்ணீர்

ஆந்திர மாநில வனத்துறையைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் கடந்த 24-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையைச் சேர்ந்தவர்கள் கடந்த 25 மற்றும் 26-ம் தேதிகளில் வீடு திரும்பினர். ஆந்திர மாநில காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினரால் அனுப வித்த சித்ரவதைகளை வேதனை யுடன் தெரிவித்தனர்.

எல்லோரும் அடித்தார்கள்

விளாங்குப்பம் கிராமத்தில் வசிக்கும் குமார் கூறும்போது, “திருப்பதி கோயிலுக்குச் சென்ற என்னை 2 போலீஸ்காரர்கள் பிடித் தார்கள். தமிழா? தெலுங்கா? என்று கேட்டார்கள். தமிழ்நாடு என்று சொன்னதும் அழைத்துச் சென்றார்கள். ‘நீ கோயிலுக்கு வரவில்லை, செம்மரக் கட்டை கடத்த வந்துள்ளாய்’ என்று கூறி ஒர் இடத்தில் அடைத்து வைத்து அடித்தார்கள். எதற்காக அடிக்கிறார்கள், நான் என்ன தவறு செய்தேன், என் மீது என்ன வழக்கு என்று கூட தெரியாது. வீட்டுக்கு வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை’’ என்றார்.

ஏமாற்றிய ஆந்திர வழக்கறிஞர்

விளாங்குப்பம் கிராமத்தில் வசிக்கும் சங்கர் கூறும்போது, “திருப்பதி கோயிலுக்குச் சென்ற போது சித்தூர் சோதனைச் சாவடி யில், நான் பயணம் செய்த பேருந்தில் போலீஸ்காரர்கள் ஏறினார்கள். தமிழா? தெலுங்கா? என்று கேட்டார்கள். தமிழ் என்று சொன்னதும், விசாரணை செய்ய வேண்டும் என்று அழைத்துச் சென்று, கைரேகை பதிவு செய்தார்கள்.

பூட்ஸ் காலால் உதைத்து சித்திர வதை செய்தார்கள். அதன்பிறகு கைது செய்தார்கள். கொலை வழக்கில் கைது செய்துள்ளோம் என்று போலீஸ்காரர் ஒருவர் சொன்னபோது அதிர்ந்துவிட்டோம். இத்துடன் நம் வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தைப் பார்க்க முடியுமா? என்ற சந்தேகம் வந்து விட்டது. பல நாட்கள் சாப்பிடாமல் மன வேதனையில் இருந்தேன்.

எங்களை ஜாமீனில் எடுப்பதற் காக ஆந்திர வழக்கறிஞரிடம் ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் கொடுத் தோம். ஆனால் பலனில்லை. சிறையை ஆய்வு செய்த பெண் நீதிபதி ஒருவர், உங்களுக்கு ஜாமீன் கேட்டு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்று சொன்னபோதுதான் உண்மை தெரிந்தது. எங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஆந்திர வழக்கறிஞர் ஜாமீன் மனு தாக்கல் செய்யாமல் இருந்துள்ளார்.

முதல்வர் உதவி செய்தார்

ஒரு வருடத்தில், ஆந்திராவைச் சேர்ந்த 60 பேர் ஜாமீனில் விடுவிக் கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 363 பேரில் 5 பேர் மன வேதனை யில் இறந்துவிட்டனர். எங்கள் வழக்கில் விசாரணை முடிந்த பிறகு, தீர்ப்புக்காக 3 மாதங்கள் காத்திருந்தோம். எங்களுக்காக ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 2 பேரை முதல்வர் ஜெயலலிதா நியமனம் செய்தார். அவர்களுடன் திருப்பதியைச் சேர்ந்த ஒரு வழக் கறிஞரும் இணைந்து செயல்பட் டார். அதன்பிறகுதான், எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது.

16-12-2013-ல் கைது செய்யப் பட்ட நான், முதல்வர் பிறந்த நாளில் கடந்த 24-ம் தேதி விடுதலை யானேன். என்னைப் போன்றவர்கள் ஜெயிலில் இருந்ததால் குடும்பம் வறுமையில் கஷ்டப்பட்டுள்ளது. பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளை செய்து தர வேண்டும். இழப்பீடு வழங்கினால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

திருமணமான ஒரு மாதத்தில்

ஜவ்வாதுமலை வீரப்பனூர் ஊராட்சி விளாங்குப்பம் கிராமத்தில் வசிக்கும் ரமேஷ் கூறும்போது, “திருப்பதி கோயிலுக்குச் சென்றோம். திருப்பதி பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கி கழிப்பறைக்கு சென்றோம். அங்கு இருந்தவர்கள் ஏவூர் பாபு என்று கேட்டார்கள். தமிழன் என்று சொன்னதும் இழுத்துச் சென்றுவிட்டார்கள். பேருந்து டிக்கெட்டை காட்டினோம். அதை வாங்கி கிழித்து வீசினார்கள். நாங்கள் எந்த பாவமும் செய்யவில்லை. அப்பாவிகளை ஜெயிலில் பிடித்துப் போட்டார்கள். திருமணமான 1 மாதத்தில் ஜெயிலுக்கு போனேன். இப்போது நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x