திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் பணியில் மெத்தனம்: பணியை விரைவாக முடிக்க மக்கள் கோரிக்கை   

திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம்.
திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம்.
Updated on
2 min read

திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியைத் தீவிரப்படுத்தி, பயன்பாட்டுக்கு விரைவாகக் கொண்டுவர வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருவண்ணாமலை நகரம் பெரியார் சிலை அருகே திண்டிவனம் சாலையில் ரயில்வே கேட் (விழுப்புரம் – காட்பாடி ரயில் பாதை) இருந்தது. ஒரு நாளைக்கு சுமார் 20 முறை மூடித் திறக்கப்பட்டது. சேத்துப்பட்டு, செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி மற்றும் சென்னை செல்லும் வழித்தடம் என்பதால், ரயில்வே கேட் பகுதியின் இரு திசைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். ஒவ்வொரு முறையும் ரயில்வே கேட் மூடப்படும்போது ஏற்படும் போக்குவரத்து பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு 30 முதல் 45 நிமிடங்களாகும்.

இதனால் பாதிக்கப்பட்டு வந்த பொதுமக்கள், திண்டிவனம் சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதன் பயனாக, ரூ.30.38 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 02-02-2019ஆம் தேதி தொடங்கியது. 2 ஆண்டுகளில் பணி நிறைவு பெற்று, மக்கள் பயன்பாட்டுக்கு ரயில்வே மேம்பாலம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

முதல் கட்டமாக, திண்டிவனம் சாலையிலும், அதன் தொடர்ச்சியாக அண்ணா சாலையிலும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள், முழுவீச்சில் நடைபெற்றாலும், ரயில்வே துறையின் மெத்தனத்தால், பணிகள் முடிவு பெறுவதில் தாமதமாகிறது. ரயில் தண்டவாளம் அமைந்துள்ள பகுதிக்கு மேலே, பாலம் கட்டும் பணியை ரயில்வே துறை செய்தாக வேண்டும். இதற்காக, சுமார் ரூ.3 கோடியில் தனியே ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், பணியைத் தொடங்கி விரைவுபடுத்துவதில் ஒப்பந்ததாரர் தரப்பு அலட்சியமாக உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, எம்.பி. அண்ணாதுரை அடுத்தடுத்து ஆய்வு செய்து, ரயில்வே துறையிடம் வலியுறுத்தியதால், பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்பிறகும், பணியில் உத்வேகம் இல்லாமல், ஆமை வேகத்தில் நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீண்டகால தாமதத்துக்குப் பிறகு, ரயில்வே தண்டவாளங்களுக்கு மேலே, கான்கிரீட் தளம் அமைப்பதற்காக கம்பிகள் கட்டப்பட்டுள்ளன. மேம்பாலத்தின் இரு பக்கங்களிலும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய் அமைத்து, அதன்பிறகு சாலை அமைக்க வேண்டும். தொடக்க நிலையிலேயே இப்பணி உள்ளது. இதனால், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி, மேலும் தாமதமாகும் எனப் பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும், அவர்கள் கூறும்போது, "திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பாலப் பணியை 2 ஆண்டுகளில் முடிப்பதாகத் தெரிவித்தனர். ஆனால், இரண்டரை ஆண்டுகள் கடந்தும் பணிகள் முடிவுக்கு வரவில்லை. கரோனா ஊரடங்கைக் காரணமாகக் கூறுகின்றனர்.

ஊரடங்கு அமலில் இருந்தாலும், கட்டுமானப் பணியைத் தொடர அரசாங்கம் அனுமதித்தது. ரயில்வே தண்டவாளத்தின் மேலே, பாலம் அமைக்கும் பணியில் ஏற்பட்ட மெத்தனமே, தாமதத்துக்குக் காரணம். ரயில்வே மேம்பாலம் பணி முடிவுக்கு வராததால், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து பாதிப்பு அதிகரித்துள்ளது.

அனைத்து வாகனங்களும் ஒரே திசையில் சென்று வருவதால், அவலூர்பேட்டை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணியைத் தீவிரப்படுத்தி முடிக்க மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in