Last Updated : 08 Aug, 2021 12:13 PM

 

Published : 08 Aug 2021 12:13 PM
Last Updated : 08 Aug 2021 12:13 PM

தெற்கு ரயில்வேயில் முதல் முறை: கோவை ரயில் நிலையத்துக்கு பசுமைக்கான 'பிளாட்டினம்' சான்று

பசுமை ரயில் நிலையத்துக்காக கோவை ரயில் நிலையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள பிளாட்டினம் சான்று.

கோவை

தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக பசுமை ரயில் நிலையத்துக்கு வழங்கப்படும் 'பிளாட்டினம்' சான்று கோவை ரயில் நிலையத்துக்குக் கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏ1 தரம், அடுத்தநிலையில் உள்ள ரயில் நிலையங்கள் பசுமைச் சான்று பெற வேண்டும் என, ரயில்வே அமைச்சகம் 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை சென்ட்ரல், எழும்பூர், மதுரை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, கோவை ஆகிய ரயில் நிலையங்கள் ஏ1 தரத்தில் உள்ளன.

இந்நிலையில், கோவை ரயில் நிலையத்துக்குப் பசுமைச் சான்று பெறும் நடவடிக்கைகளை ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். அதன் பலனாக, தற்போது பசுமைச் சான்று கிடைத்துள்ளது.

இது தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் (ஐஜிபிசி) ரயில் நிலையங்களை ஆய்வு செய்து பசுமைச் சான்று வழங்கி வருகிறது. அவ்வாறு சான்று பெற சில விதிமுறைகள் உள்ளன.

அதன்படி, ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு உள்ள நிரந்தர வசதிகள், ரயில் நிலைய வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, சூரிய ஒளி மின்சார உற்பத்தி, நடைமேடைகளில் மின்சாரத்தைச் சேமிக்கும் எல்இடி விளக்குகள், மின்விசிறிகள், கழிவுநீர் மறுசுழற்சி மையம், மேற்கூரையில் வெப்பத்தை எதிரொலிக்கும் வண்ணப்பூச்சு உள்ளிட்டவை இருக்க வேண்டும். இவையனைத்தும் கோவை ரயில் நிலையத்தில் உள்ளன.

மேலும், ரயில் நிலைய வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. செடிகளும் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டு, ஐஜிபிசி அதிகாரிகள் ரயில் நிலையத்தை ஆய்வு செய்து தற்போது சான்று வழங்கியுள்ளனர்.

தரத்துக்கேற்ப 'சில்வர்’, 'கோல்டு’, 'பிளாட்டினம்' என மொத்தம் 3 வகையான ரேட்டிங் அளிக்கப்படுகிறது. அதில், அதிகபட்ச ரேட்டிங்கான 'பிளாட்டினம்' சான்று கோவை ரயில் நிலையத்துக்குக் கிடைத்துள்ளது. தெற்கு ரயில்வேயில் 'பிளாட்டினம்' சான்று பெற்ற முதல் ரயில் நிலையமாக கோவை நிலையம் உள்ளது.

நாட்டில் இதுவரை 6 ரயில் நிலையங்களுக்கு மட்டுமே 'பிளாட்டினம்' சான்று கிடைத்துள்ளது. கோவை தவிர, செகந்திராபாத், புதுடெல்லி, ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம், ஆசன்சோல் ஆகிய 5 ரயில் நிலையங்களுக்கு இதுவரை இந்தச் சான்று கிடைத்துள்ளது" எனக் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x