Published : 08 Aug 2021 03:18 AM
Last Updated : 08 Aug 2021 03:18 AM

கோயம்பேட்டில் வாகன சோதனையின்போது சினிமா படப்பிடிப்புக்கு துப்பாக்கி எடுத்து வந்தவரால் பரபரப்பு

கோயம்பேட்டில் வாகன சோதனையின்போது சினிமா துப்பாக்கி எடுத்து வந்தவரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி, அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில், இரண்டு INSAS வகை துப்பாக்கிகள் இருந்ததைக்கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை கோயம்பேடு பேருந்து நிலைய வளாக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் பெரம்பூர் கஸ்தூரிபாய் காலனியைச் சேர்ந்த விக்டர் (27) என்பதும், திரைப்பட இயக்குநர் பாண்டிராஜின் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

டம்மி துப்பாக்கி

இயக்குநர் பாண்டிராஜ், சூர்யாவை வைத்து ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். தற்போது காரைக்குடியில் இந்த படத்துக்கான ஷூட்டிங் நடந்து வருகிறது. அந்த படப் பிடிப்புக்காக இரண்டு டம்மி துப்பாக்கிகள் தேவைப்பட்டதால், விக்டர் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து மூலமாக காரைக்குடிக்கு அனுப்பிவைக்க சென்று இருக்கிறார்.

எனினும், டம்மி துப்பாக்கிக்கு உண்டான ஆவணங்கள் விக்டரிடம் இல்லாததால், போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x