Last Updated : 04 Feb, 2016 05:07 PM

 

Published : 04 Feb 2016 05:07 PM
Last Updated : 04 Feb 2016 05:07 PM

பேனர் கிழிப்பு வழக்கு: விஜயகாந்துக்கு உயர் நீதிமன்றம் முன் ஜாமீன்

தஞ்சாவூரில் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது முதல்வர் ஜெயலலிதா பேனர் கிழிக்கப்பட்ட வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த வழக்கில் விஜயகாந்தை கைது செய்ய நாளை (பிப்ரவரி 5-ம் தேதி வரை) தடை இருந்தது. இந்நிலையில் இன்று வியாழக்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேலாயுதன் விஜயகாந்த் உத்தரவின் பேரிலேயே பேனர் கிழிக்கப்பட்டதால் அவரை கைது செய்ய வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி பிரகாஷ், "இது அரசியல் விவகாரம். இதை பெரிதுபடுத்த தேவையில்லை. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்டு ஒரு மாத காலமாக சிறையில் இருக்கின்றனர். இந்நிலையில், விஜயகாந்தை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள தேவையில்லை. எனவே விஜயகாந்துக்கு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்குகிறது" என்றார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 8 பேருக்கும் முன் ஜாமீன் வழங்குவதாக தெரிவித்தார். விஜயகாந்த், தஞ்சாவூர் முதலாவது நீதித்துறை நடுவண் மன்றம் ஆஜராகி ஜாமீன் பெறலாம் என்றார். தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றார். அதேபோல் மற்ற 8 பேரும் தஞ்சை நீதிமன்றத்தில் ரூ.45,000 செலுத்துவிட்டு ஜாமீன் பெறலாம் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

தஞ்சை நீதிமன்றத்துக்கு பதிலாக சென்னையில் உள்ள ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற அனுமதிக்க வேண்டும் என விஜயகாந்தின் வழக்கறிஞர் அஜ்மல் கான் கோரினார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

வழக்கு பின்னணி:

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காத தமிழக அரசைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி கூட்டம் நடைபெற்றது.

விஜயகாந்த் பேசிக்கொண்டிருந்தபோது, மேடை எதிரில் இருந்த பஸ் ஸ்டாப் முகப்பில் பொருத்தி யிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைப் பார்த்த விஜயகாந்த், “அவரது முகத்தைக் கூட பார்க்கப் பிடிக்கவில்லை. அதை மறையுங்கள்” என்றார். அதன்படி, அருகில் தொங்கிய விஜயகாந்தின் பேனரைக் கொண்டு சில தொண்டர்கள் ஜெயலலிதா படத்தை பாதியளவு மறைத்தனர். சிறிது நேரம் கழித்து ஆர்வ மிகுதியில் ஒரு தொண்டர், பேனர் கயிற்றை அவிழ்த்து ஜெயலலிதா படத்தை முழுமையாக மறைக்க முயன்றார். அப்போது, விஜயகாந்தின் பேனர் அறுந்து விழுந்தது. இதைப் பார்த்த விஜயகாந்த், அப்படியென்றால், ஜெயலலிதா படத்தையும் அகற்றுங்கள் என்றார். உடனே, தொண்டர்கள் ஜெயலலிதா படத்தை பெயர்த்து வீசினர்.

பேனர் கிழிப்பு சம்பவம் தொடர்பாக, அதிமுக நிர்வாகி எம்.ரங்கசாமி, தஞ்சை கிழக்குக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் விஜயகாந்த், கட்சியின் தெற்கு மாவட்டச் செயலர் ஜெயப்பிரகாஷ், வடக்கு மாவட்டச் செயலாளர் பரமசிவம், தஞ்சை மாநகரச் செயலாளர் அடைக்கலம் உள்ளிட்ட 59 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x