Published : 08 Aug 2021 03:18 AM
Last Updated : 08 Aug 2021 03:18 AM

மருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு 27% இடஒதுக்கீடு: முதல்வருக்கு பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் நன்றி

சென்னை

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான வி.ஈஸ்வரய்யா, சமூகப் புரட்சி கூட்டணித் தலைவர் நீதியரசர் வீரேந்திர சிங் யாதவ், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் ரஞ்சன் ராஜேஷ், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அவதேஷ் கர்சா, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பு செயல் தலைவர் ஹன்ஸ்ராஜ் ஜங்கரா, உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் ஸ்ரீகாண்ட் பால், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி மாணவர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்ஹா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசிடம் வலியுறுத்தி, பெற்றுத் தந்ததற்காக முதல்வருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் உடனிருந்தார்.

பின்னர், முதல்வரிடம் பல்வேறு அமைப்பினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடானது, தங்களாலும், தங்களது சட்டக் குழுவினரின் முயற்சியாலுமே கிடைத்துள்ளது. இதன்மூலம் ஓபிசி பிரிவினருக்கான சமூக நீதி காப்பாற்றப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு, சமூகப் பொருளாதார ஜாதி வாரிக் கணக்கெடுப்பு தொடர்பாக நாங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் முதுநிலை பட்டப் படிப்பு வரை தரமான கல்வி வழங்க வேண்டும்.

நிர்வாகம், செயல்பாடு, சட்டம்,நீதித் துறை மற்றும் தனியார்துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை முறையாக வழங்க வேண்டும்.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு தனி துறை அமைக்க வேண்டும்.பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டை வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும்அனைவருக்கும் வழங்க வேண்டும்.

அதில் இனப் பாகுபாடு கூடாதுஎன்றும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். தங்களது தலைமை மற்றும் வழிகாட்டுதலில் இந்தக்கோரிக்கைகளை வென்றெடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x