Published : 08 Aug 2021 03:18 AM
Last Updated : 08 Aug 2021 03:18 AM

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக தமிழகம் முழுவதும் - கோயில்களில் ஒரு லட்சம் தல விருட்சங்கள் நடும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக கோயில் நிலங்களில் ஒரு லட்சம் தல மரக்கன்றுகளை நடும் திட்டத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அருகில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர்.

சென்னை

தமிழகம் முழுவதும் கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் ஒரு லட்சம் தல மரக்கன்றுகள் (தல விருட்சம்) நடும் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரதுநினைவாக தமிழகம் முழுவதும் கோயில் நிலங்களில் ஒரு லட்சம் தல மரக்கன்றுகள் நடும் திட்டத் தொடக்க நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது.

இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, நாகலிங்க மரக்கன்றை நட்டுவைத்து, ஒரு லட்சம் தல மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தொடங்கிவைத்தார். ‘மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்’ என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாசகம் அடங்கிய பதாகையையும் அவர் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, இந்து சமய அறநிலையத் துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

3 மாதங்களில் முடிக்க திட்டம்

இது தொடர்பாக அறநிலையத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஒரு லட்சம் தல மரக்கன்றுகள் நடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கோயில் தோன்றுவதற்கு முன்பே இருப்பதால், அம்மரம் தல மரம் என்று போற்றப்படுகிறது. இத்தகு பெருமைமிக்க தல மரங்களைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 3 மாதங்களுக்குள் இந்த திட்டத்தை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x