

கடுமையான பயிற்சிகளைச் செய்தபோதிலும் ஒலிம்பிக்கில் வெற்றி பெற முடியாமல் போய்விட்டதாகவும், அடுத்த போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வோம் எனவும் ஒலிம்பிக்கில் பங்கேற்று நாடு திரும்பிய திருச்சி வீராங்கனைகள் சுபா, தனலட்சுமி ஆகியோர் தெரிவித்தனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க, இந்திய தடகள அணியின் தொடர் ஓட்ட வீரர்கள் பட்டியலில் திருச்சி மாவட்டத்திலிருந்து லால்குடியைச் சேர்ந்த ராணுவ வீரரான ஆரோக்கியராஜீவ் (ஆண்கள், கலப்பு 4x400 தொடர் ஓட்டம்), குண்டூரைச் சேர்ந்த தனலட்சுமி சேகர் (கலப்பு 4x400 மீ தொடர் ஓட்டம்), கூத்தைப்பார் பகவதிபுரத்தைச் சேர்ந்த சுபா வெங்கடேசன் (கலப்பு 4x400 மீ தொடர் ஓட்டம்) ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் ஆரோக்கியராஜீவ், சுபா வெங்கடேசன் ஆகியோர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்றனர். தனலட்சுமிக்கு ஆடுகளத்தில் இறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர் ஓட்ட போட்டிகளில் இந்திய அணியால் வெற்றி பெற முடியாத நிலையில், அனைத்து வீரர்களும் நாடு திரும்பியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து சென்னையிலிருந்து விமானத்தில் நேற்றிரவு திருச்சிக்கு வந்த சுபா வெங்கடேசன், தனலட்சுமிக்கு விமானநிலையத்தில் அவர்களின் குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது சுபா வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கும், மற்றொரு வீராங்கனையான தனலட்சுமிக்கும் அரசு வேலை வழங்குவதாக அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், ஒத்துழைப்பு அளித்து வரும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நன்றி.
கடுமையான பயிற்சிகளைச் செய்தபோதிலும் ஒலிம்பிக்கில் எங்களால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது வேதனையளிக்கிறது. வெற்றிக்கு இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பதை இந்த தோல்வியிலிருந்து கற்றுக் கொண்டுள்ளோம்.
2024-ல் நடைபெறும் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வோம். விளையாட்டு வீரர்களுக்கு ஆரம்ப நிலையிலிருந்தே உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும். எங்களுக்குக்கூட விளையாட்டில் ஒரு உயர்ந்த நிலைக்கு வந்தபிறகுதான் உதவிகள் கிடைத்தன’’ என்றார்.
வீராங்கனை தனலட்சுமி கூறும்போது, ‘‘ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்ற கனவு நனவாகியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் ஆடுகளத்தில் இறக்கப்படாததற்கு தனிப்பட்ட காரணங்கள் ஏதுமில்லை. கடுமையான பயிற்சி செய்து, வரக்கூடிய 2024 ஒலிம்பிக்கில் சிறந்த வெற்றியை பதிவு செய்வோம்’’ என்றார்.