Published : 08 Aug 2021 03:19 AM
Last Updated : 08 Aug 2021 03:19 AM

போளூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை

போளூர் பேரூராட்சி அலுவலகம்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில், போளூர் பேரூராட்சி யானது பரப்பளவில் பெரியதாகும். 12.58 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. 1946-ல் இரண்டாம் நிலை பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டது.

பின்னர், வரி வருவாய் அடிப்படையில், 1969-ல் தேர்வு நிலை பேரூராட்சி மற்றும் 2012-ல் சிறப்பு நிலை பேரூராட்சி என தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 18 பேரூராட்சி வார்டுகள் உள்ளன. ‘போளூர்’ என்ற பெயரில் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து வருகிறது.

2011-ல் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 13,862 ஆண்களும், 14,261 பெண்களும் என மொத்தம் 28,123 பேர் உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மக்கள் தொகை எண் ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 31 ஆயிரத்தை நெருங்கி இருக்கும் என போளூர் மக்கள் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகைகணக்கெடுப்பு, கரோனா தொற்று பரவலால் தடைபட் டுள்ளது.இல்லையென் றால், போளூர் பேரூராட்சியின் மக்கள் தொகை, 30 ஆயிரத்தை கடந்தது என புள்ளி விவரம் மூலம் தெரிந்திருக்கும்” என்கின்றனர். இதேபோல், போளூர் பேரூராட்சியின் வரி வருவாயும் ரூ.1 கோடியை கடந்துள் ளதாகவும், அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் தொகை மற்றும் வரி வருவாய் உயர்வு எதிரொலியாக, போளூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற் றுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்றதும் புதிதாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் உருவாக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வமான பேச்சு எழுந்துள்ளது. இதனால், போளூர் பேரூராட்சியும் நகராட்சி யாக தரம் உயர்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்ற நம்பிக்கையில் போளூர் மக்கள் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “ரயில் மற்றும் பேருந்து வழித்தடங்கள் உள்ள நகரமாக போளூர் உள்ளது. மக்கள் தொகை மற்றும் வரி வருவாயிலும் பல மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது. போளூர் நகர பகுதி, கடந்த 10 ஆண்டு களாக விரிவடைந்து வருகிறது. போளூருக்கு புறவழிச்சாலை வந்ததால், கிழக்கே வெண்மணி வரையும், வடக்கே குன்னத்தூர் வரையும், தெற்கே வசூர் வரையும் வளர்ந்துள்ளது. வணிக நிறு வனங்கள் மற்றும் குடியிருப்புகள் அதி கரித்துள்ளன. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உட்கட்டமைப்புகள் மற்றும் அடிப்படை வசதிகள் விரைவாக செய்து கொடுக்க முடியும். எனவே, சட்டப்பேரவை கூட்டத் தொடரில், போளூர் பேரூராட்சியானது, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது என்ற அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x