

டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சட்டக் கல்லூரி மாணவர்களும் போராட்டம் செய்தனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூரில் உள்ள டி.டி. மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த கல்லூரியில் படித்த 120 மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியானது. தாங்கள் வேறு கல்லூரிகளில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்துதர வேண்டும் அல்லது டிடி மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை காலை அரும்பாக்கத்தில் உள்ள மருத்துவ கவுன்சில் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிலையில் டிடி மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக சட்டக் கல்லூரி மாணவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் இணைந்து அரும்பாக்கம் மருத்துவ கவுன்சில் அலுவலகம் எதிரே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.