

வேலூர் மாநகர திமுகவில் கடந்த சில மாதங்களாக நீருபூத்த நெருப்பாக இருந்த கோஷ்டி பூசல் நேற்று கைகலப்பில் தொடங்கி யுள்ளதால் கட்சியினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் சட்டப்பேரவை தொகுதி யில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திகேயன் சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கட்சியில் உள்ள சில முக்கிய நிர்வாகிகள் அவருக்கு எதிராக செயல்பட்டதும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. மேலும், தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகளை அரவணைக்க வில்லை என கார்த்திகேயன் மீதும் ஒரு தரப்பினர் புகார் கூறி வரு கின்றனர்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் டாக்டர் விஜய், வேலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உதவியுடன் வரும் உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு போட்டியிட வியூகம் அமைத்து வருகிறார். வேலூர் மேயர் பதவி பட்டியலினத்தவருக்கானது என்பதை பொதுப் பிரிவினருக்காக மாற்றவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், கடந்தமுறை மேயர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மருத்துவர் ராஜேஸ் வரிக்கு மீண்டும் வாய்ப்பளிக்க எம்எல்ஏ கார்த்திகேயன் ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. திமுகவுக்காக அரசு மருத்துவர் பதவியை ராஜினாமா செய்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் எம்எல்ஏ ஆதர வாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதி யின் 3-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், வேலூர் எம்.பி., கதிர்ஆனந்த், மத்திய மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு எம்எல்ஏவுமான நந்தகுமார், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், முன்னாள் அமைச்சர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், மத்திய மாவட்ட அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது எம்எல்ஏ கார்த்திகேயன் தரப்புக்கும், டாக்டர் விஜய் தரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இருதரப் பினரையும் நந்தகுமார் எம்எல்ஏ சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார்.
மாவட்டச் செயலாளர் அறையில் நடைபெற்ற பிரச்சினை குறித்து திமுகவின் முன்னணி, மூத்த நிர்வாகிகள் தரப்பில் விசாரித்த போது, ‘‘மாநகர நிகழ்ச்சிக்கு ஏன் தன்னை அழைக்கவில்லை என டாக்டர் விஜய் முதலில் பேச ஆரம்பித்ததும் அவருக்கு ஆதர வாக பொதுக்குழு உறுப்பினர் அ.ம.ராமலிங்கம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கார்த்திகேயன், ‘தலைவர் நினைவு தினத்தை எளிமையாக கொண்டாட தளபதி கூறியுள்ளார். கட்சி அலுவலகத்தில் தலைவர் சிலை இருந்ததால் மாலை அணிவிக்க வேண்டும் என்பதற்காக எம்.பி., மாவட்டச் செயலாளரை கூப் பிட்டேன். வேறு யாரையும் கூப்பிடவில்லை’’ என்றார்.
இதற்கு, விஜய் தரப்பினர் ஒருமையில் பேச, ஆவேசமான எம்எல்ஏ கார்த்திகேயன், ‘எம்பி., எம்.எல்.ஏ தேர்தலில் நீங்கள் எல்லாம்வேலை செய்து வெற்றி பெற வைக்கவில்லை. உங்களை அழைக்க வேண்டிய அவசியமும் இல்லை’ என கூறியுள்ளார். இதைக்கேட்டதும் அ.ம.ராமலிங்கம், எம்எல்ஏ-வை தாக்க பாய்ந்து வந்தபோது கைகலப்பு ஏற்பட்டது.
இந்த கைகலப்பு குறித்து திமுக பொதுச்செயலாளரிடம் புகார் தெரிவிக்க விஜய் தரப் பினர் தயாராகி வருகின்றனர். ஆனால், அங்கு நடந்த சம்பவம் முழுவதும் அந்த அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதை போட்டுப் பார்க்கட்டும் என்று எம்எல்ஏ தரப்பினர் கூறியுள்ளனர். வீடியோ பதிவுதான் இவர்களின் பஞ்சாயத்துக்கு முக்கிய சாட்சி யாக இருக்கப்போகிறது’’ என்று தெரிவித்தனர்.
வேலூர் மாநகர திமுகவில் நடைபெற்ற இந்த கைகலப்பு சம்பவம் வரவுள்ள மாநகராட்சி மேயர் தேர்தலில் பெரிதாக எதிரொலிக்கும் என திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.