

தடகளப் போட்டிகளில் ஒலிம்பிக் தங்கம் வெல்லும் இந்தியாவின் 120 ஆண்டு காலக் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்தவர் நீரஜ் சோப்ரா என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. இதன் மூலம் தடகளப் போட்டியில் ஒலிம்பிக் களத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்து, அவர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. ஹரியாணா மாநிலம் பானிபட்டில் உள்ள அவரது வீட்டின் முன் மக்கள் தேசியக் கொடியுடன் திரண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீரஜ் சோப்ராவுக்குப் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 120 ஆண்டு காலக் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்தவர் என்று நீரஜ் சோப்ராவுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு மகத்தான நாள். தடகளப் போட்டிகளில் ஒலிம்பிக் தங்கம் வெல்லும் இந்தியாவின் 120 ஆண்டு காலக் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்த நீரஜ் சோப்ரா அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நூறு கோடி இதயங்களில் ஒரு புதிய நம்பிக்கையுணர்வை நீங்கள் விதைத்துள்ளீர்கள். உண்மையிலேயே நீங்கள் நாட்டின் நாயகன்'' என்று பதிவிட்டுள்ளார்.