

மதுரை மதுரை அரசு மருத்துவமனையில் கறுப்பு பூஞ்சை நோயினால் (mucormycosis) பாதிக்கப்பட்ட 331 பேரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை ஒருவர் கூட இந்த நோய்க்கு இறக்கவில்லை.
கரோனா தொற்று பரவத் தொடங்கியதும் தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த காலத்தில் மிக அரிதாக இந்த நோய் ஏற்பட்டு வந்த நிலையில் கரோனாவுக்குப் பிறகு அதிகமானோர் பாதிக்கப்பட்டதால் இந்த நோயும் பரவக்கூடியதோ என்று மக்கள் அச்சமடைந்தனர். குறிப்பாக கரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்ட நோயாளிகளுக்கு இந்தத் தொற்று அதிகமாக ஏற்பட்டது.
ஆனால் மருத்துவ வல்லுநர்கள், ‘‘கருப்புப் பூஞ்சை நோய் பரவக்கூடியது அல்ல. வைரஸ் போல் கருப்புப் பூஞ்சைகள் அனைத்து இடங்களிலும் இருக்கும். அது எல்லோரையும் எளிதில் தாக்காது, கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததாலே தற்போது இந்த தொற்று ஏற்படுகிறது’’ என்று தெளிவுப்படுத்தினர்.
இந்நிலையில் தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை தொற்று ஏற்படத் தொடங்கியதும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கருப்புப் பூஞ்சை சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது. காது, மூக்கு, தொண்டைப் பிரிவு துறைத் தலைவர் தினகரன் தலைமையில் மருத்துவக் குழுவினர், இந்த சிகிச்சைப் பிரிவில் நியமிக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதுவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 331 நோயாளிகளும் மருத்துவக் குழுவின் சிகிச்சையால் முழுமையாக குணமடைந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் கூட இந்த நோய்க்கு மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழக்கவில்லை. அதனால், மருத்துவக் குழுவினரை டீன் ரத்தினவேலு இன்று அழைத்துப் பாராட்டினார்.
காது மூக்கு தொண்டைப் பிரிவு துறைத் தலைவர் தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இதுவரை கருப்புப் பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட 365 நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டது. 331 நோயாளிகள் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மற்றவர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனர். குணமடைந்தவர்களில் 112 நோயாளிகளுக்கு இந்த நோய் மூளைக்குள் பரவுதல் வெற்றிகரமாக தடுக்கப்பட்டுள்ளது. இதில் பல நோயாளிகளுக்கு கண்பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. அதுவும் சரி செய்யப்பட்டுள்ளது.
அதுபோல் மூக்கையில் ஏற்பட்ட சதையைச் சரி செய்வதற்கு எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை, கண் குறைபாடுகளைக் குறைக்க கண்வழி ஆம்போடெரிசின் ஊசி மருந்து, பொசகொனசோல் மாத்திரை சிகிச்சை உள்ளிட்டவை வழங்கப்பட்டன ’’ என்று தெரிவித்தார்.