

புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பாசனக் கண்மாயில் 1,000 ஆண்டுகள் பழமையான குமிழிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, மேலூர் பாசனக் கண்மாயில் உள்ள குமிழிக்காலில் எழுத்து பொறிக்கப்பட்டு இருப்பதாக வேளாண் பொறியாளர் என்.நாராயணமூர்த்தி அளித்த தகவலின் அடிப்படையில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன் தலைமையிலான குழுவினர் அண்மையில் ஆய்வு செய்தனர்.
அதில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தட்டான் திறமன் என்பவர் நீர்ப்பாசனக் கண்மாய்க்குப் பெருமடைக்கால் அமைத்துக் கொடுத்த தகவல் பொறிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆ.மணிகண்டன் கூறியதாவது:
’’பாசனக் கண்மாயில் தண்ணீரைத் திறந்து விடவும், நிறுத்தவும் குமிழி எனும் முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனருகே உயரமான கால்கள் நடப்பட்டு இருக்கும். இதற்கு குமிழிக்கால்கள் என்று பெயர்.
புதுக்கோட்டை மாவட்டம், மேலூர் பாசனக் கண்மாயில் கண்டுபிடிக்கப்பட்ட குமிழிக்கால் கல்வெட்டில், "ஸ்வஸ்தி ஶ்ரீ சிறுவாயி ஞாட்டு மேலூர்த்தட்டான் திறமன் திருவிளப்படிக்கு நட்டுவித்த பெருமடைக்கால்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, சிறு வாயில் நாட்டு மேலூர் தட்டான் திறமன் என்பவர் இறைவனின் எண்ணப்படி (திரு உளப்படிக்கு) பெருமடைக்கால் நட்டுவித்தது என்பது பொருளாகும்.
இக்கல்வெட்டானது, பராந்தகன் காலத்தைய எழுத்தமைதியோடு காணப்படுவதால் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கலாம். இக்கல்வெட்டின் மூலம் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு சாகுபடியையும், அதற்குத் தேவையான பாசன ஏற்பாடுகளையும் இறைத்தொண்டாக நினைத்துச் செயல்படுத்தியதை அறிந்துகொள்ள முடிகிறது.
இதேபோன்று, தமிழகத்தில் இதுவரை 250 குமிழிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள், புதுக்கோட்டை மாவட்டத்தில் 42 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில், பெரும்பாலானவை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு.ராஜேந்திரனால் கண்டுபிடிக்கப்பட்டவையாகும்.
குறிப்பாக, புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோமாறன் சடையன் என்ற முதலாம் வரகுணபாண்டியன் அமைத்த கல்வெட்டு, கந்தர்வக்கோட்டை அருகே நொடியூர் மருதனேரிக்கு 9-ம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் மங்கனூரைச் சேர்ந்த இரணசிங்க முத்தரையன் அமைத்த கல்வெட்டு போன்ற கல்வெட்டுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
இந்தக் கல்வெட்டுகள் பழங்காலப் பாசன முறையில் தமிழர்கள் கொண்டிருந்த நீர்ப்பாசன மேலாண்மை நுட்பத்தையும், நீர்ப்பங்கீட்டில் பின்பற்றப்பட வேண்டிய சமூக நடைமுறைகளையும் வெளிப்படுத்துபவையாக உள்ளன.
மேலூர் கல்வெட்டு ஆய்வின்போது, அப்பகுதியைச் சேர்ந்த முருகபிரசாத், ராகுல்பிரசாத், தொல்லியல் ஆய்வுக் கழக உறுப்பினர் பீர்முகமது ஆகியோரும் உடனிருந்தனர்’’.
இவ்வாறு தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன் தெரிவித்தார்.