

அணியும்போதெல்லாம் சுதந்திரமானவர்கள் என்பதை உணரச்செய்யும் கைத்தறி ஆடைகளை ஆதரிப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுதேசி இயக்கத்தின் போர் வாளாகவும், கைத்தறி தொழிலின் முக்கியத்துவமும், அது சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிவரும் பங்களிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறித் தொழிலை மேம்படுத்தி, கைத்தறி நெசவாளர்களின் பெருமையை உயர்த்திட வேண்டுமென்ற நோக்கிலும் இன்று (ஆகஸ்ட் 7ஆம் தேதி) தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கைத்தறி நெசவாளர்களுடன் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடுகிறார்.
இந்நிலையில் சுதந்திரமானவர்கள் என்பதை உணரச்செய்யும் கைத்தறி ஆடைகளை ஆதரிப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நம் நாட்டின் தட்பவெப்பத்திற்கு உகந்தவை கைத்தறி ஆடைகள்தான். தேசத்தின் பொருளாதாரத்திலும் விவசாயத்திற்குப் பிறகு நெசவுக்கே பெரும்பங்கு இருக்கிறது. அணியும்தோறும் நாம் சுதந்திரமானவர்கள் என்பதை உணரச்செய்யும் கைத்தறி ஆடைகளை ஆதரிப்போம். சுதேசிகளை நினைவுகூர்வோம் என்று பதிவிட்டுள்ளார்.
கைத்தறித் தொழில், விவசாயத்திற்கு அடுத்தப்படியாக ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 1.90 லட்சம் நெசவாளர் குடும்பங்கள் உள்ளதோடு, இத்தொழில் 3.19 லட்சம் நெசவாளர்கள் மற்றும் நெசவு சார்ந்த உப தொழில்புரிவோருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.