

தமிழகத்தில் 7 சார் பதிவாளர்கள் உள்ளிட்ட 30 பதிவுத் துறை ஊழியர்களை முக்கியத்துவம் இல்லாத பணிகளுக்கு இடமாற்றம் செய்து பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரசு நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பு:
திடீர் ஆய்வுகள்
பதிவுத் துறையில் மக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் வெளிப்படையாக நடக்கிறதா என்று பல்வேறு வகைகளில் கண்காணிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையினரால், சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் குறைகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முக்கியத்துவம் இல்லாத வேறு பணியிடங்களுக்கு மாற்றப்படுகின்றனர்.
அதன்படி, குன்றத்தூர், மேட்டுப்பாளையம், ரெட்ஹில்ஸ், தேவகோட்டை, பாபநாசம், சோளிங்கர், சின்னமனூர், கறம்பக்குடி, ஓசூர், கடையநல்லூர், நிலக்கோட்டை, போடிநாயக்கனூர், அந்தியூர், திருச்செங்கோடு, மணப்பாறை, விளாத்திக்குளம், மன்னார்குடி, தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், வல்லம் (திண்டிவனம்) ஆகிய சார் பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியும் 7 சார்பதிவாளர்கள், 15 உதவியாளர்கள், 2 இளநிலை உதவியாளர்கள், 6 அலுவலக உதவியாளர்களை முக்கியத்துவம் இல்லாத பணியிடங்களுக்கு மாற்றி வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
பதிவுத் துறையின் நேர்மையான செயல்பாடுகளை உறுதிப்படுத்த செய்யப்படும் பல்வேறு சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, இந்தமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.