

தஞ்சாவூரில் அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக, பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை உட்பட 1,200-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து, தஞ்சாவூரில் நேற்று முன்தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஆனால், இதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, தஞ்சாவூர் தெற்கு,மேற்கு, மருத்துவக் கல்லூரி ஆகிய 3 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், அனுமதியின்றி மாட்டு வண்டி ஊர்வலம் நடத்தியது, உண்ணாவிரதம் மேற்கொண்டது, கரோனா தொற்று பரவும் வகையில் செயல்பட்டது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட 1,260 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூர் எலிசா நகரில் பாஜக சார்பில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளெக்ஸ் பேனரை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று முன்தினம் அகற்றினர். இதற்கு தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் இளங்கோ உள்ளிட்ட பாஜகவினர், அங்கிருந்த நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் உள்ளிட்ட மாநகராட்சி ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் அளித்த புகாரின்பேரில், மருத்துவக் கல்லூரி போலீஸார் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, லால்குடியைச் சேர்ந்த பாஜக தெற்கு மண்டலத் தலைவர் அசோக்குமார்(44), அறந்தாங்கி நகரச் செயலாளர் இளங்கோவன்(33) ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் விடுவிக்கக் கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்பி, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினர் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த நேற்று திரண்டனர். அவர்களிடம் எஸ்பி ரவளிப்பிரியா பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.