

அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றுநெல்லை முன்னாள் மேயர்புவனேஸ்வரி, முன்னாள் எம்பி வசந்தி முருகேசன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் இருந்துஅமமுகவுக்கு சென்ற பலரும்,மீண்டும் அதிமுகவுக்கு திரும்பினர். முக்கிய நிர்வாகிகளான தங்கத்தமிழ்ச்செல்வன், கலைராஜன், செந்தில்பாலாஜி ஆகியோர் திமுகவுக்கு சென்றனர். இந்நிலையில், சட்டப்பேரவை பொதுத்தேர்தல் தோல்வி அதிமுகவில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அதிமுகவில் இருந்து திமுகவுக்கு செல்வோர்எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாரம்ஒரு முக்கிய நிர்வாகி என்றஅளவில் பலரும் திமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.
இதில் முதலில் சென்றவர், அதிமுக சார்பில் நெல்லை மேயராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவருமானவிஜிலா சத்யானந்த்.
அவரைத் தொடர்ந்து, அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முதல்வர்மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.
அதேபோல், அதிமுகவில் வர்த்தக அணிச் செயலாளராகவும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் நெருக்கத்தில் இருந்தவருமான சிந்து ரவிச்சந்திரன், நாமக்கல் முன்னாள் எம்பி சுந்தரம் என பலரும் தனதுஆதரவாளர்களுடன் இணைந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து, ராமநாதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான வ.து.நடராஜன் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து திமுகவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர். திமுகவில் இணைந்த அனைவரும் அதிமுகவின் இரட்டை தலைமை மீது தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் அமமுகவில் இருந்தும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் திமுகவுக்கு சென்றுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, திருநெல்வேலி மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்பியுமான வசந்தி முருகேசன், மாநகராட்சி முன்னாள் மேயர் புவனேஸ்வரி, நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லதுரை ஆகியோர் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இதுதவிர, அதிமுகவைச் சேர்ந்த புதுக்கோட்டை ஒன்றிய தலைவர் பெ.சின்னையா, ஒன்றிய கவுன்சிலர் வெண்ணிலா கருப்பையா, திருமயம் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி ஆகியோரும் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்வில் எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளர் மு.அப்துல் வகாப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, மேலும்பல முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், சில முன்னாள் அமைச்சர்களும் விரைவில் திமுகவுக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், திமுக.வுக்கு செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ள பலரையும் அதிமுகதலைமை கண்காணித்து வருவதுடன், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் இறங்கிஉள்ளதாகக் கூறப்படுகிறது.