

'தமிழக சட்டப்பேரவை தேர்தலை திமுகவும் பாஜகவும் ஓரணியில் சேர்ந்து சந்திக்க எவ்வித வாய்ப்பும் இல்லை. பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்கலாம் என வெளியாகியிருக்கும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை' என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் 'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நேற்று (புதன்கிழமை) சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து பலவிதமான தகவல்கள் பரவின. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு ‘வாழும் கலை’ என்ற அமைப்பை நடத்தி வரும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உலகப் புகழ் பெற்ற ஆன்மிகத் தலைவர். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு நெருக்கமான அவர். தேர்தல் நேரத்தில் ஸ்டாலினை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்திருப்பதால் இது பாஜக - திமுக கூட்டணிக்கான அச்சாரமாக இருக்கலாம் என சலசலக்கப்பட்டது.
இந்நிலையில், இது ஸ்டாலின் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "தமிழக சட்டப்பேரவை தேர்தலை திமுகவும் பாஜகவும் ஓரணியில் சேர்ந்து சந்திக்க எவ்வித வாய்ப்பும் இல்லை. பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்கலாம் என வெளியாகியிருக்கும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை.
ஆனால், யாரெல்லாம் எங்களை அரசியலில் தீண்டத்தகாதவர்கள் போல் பாவித்தார்களோ அவர்களெல்லாம் எங்களை நோக்கி படையெடுப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. எங்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதில் விருப்பம் இருப்பதாக பாஜகவிடம் இருந்து எவ்வித அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வரவில்லை.
'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை பெங்களூருவில் ஒரு முறை நான் சந்தித்தேன். அப்போதே அவர் சொல்லியிருந்தார் சென்னை வந்தால் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் என்று. அதனடிப்படையிலேயே நேற்றைய சந்திப்பு நிகழ்ந்தது.
நான் மேற்கொண்டுள்ள நமக்கு நாமே பயணத்தை அவர் பாராட்டினார். மேலும், டெல்லியில் மார்ச் 11, 12 தேதிகளில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், அந்நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியாதது குறித்து அவரிடம் விளக்கினேன்" என்றார்.