

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவாக பன்னாட்டு இணையவழி இரண்டாம் ஆண்டு மெய்நிகர் மாரத்தான் போட்டி ஆகஸ்ட் 7-ம் தேதி (இன்று) தொடங்குகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 28 நாடுகளைச் சேர்ந்த 8,541 பேர் பங்கேற்றனர். பதிவுக் கட்டணமாக கிடைத்த ரூ.23.41 லட்சம் கரோனா பேரிடர் நிதிக்காக அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவாக இன்று மாலை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் `கலைஞர் நினைவு பன்னாட்டு இணையவழி 2-ம் ஆண்டு மெய்நிகர் மாரத்தான் போட்டி'யின் முதல்பதிவை திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கிவைக்கிறார்.
மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலும் இப்போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கிலும் இப்போட்டி முன்னெடுக்கப்படுகிறது.
வரும் 31-ம் தேதி வரை இதில் பங்கேற்கலாம். உலகத்தின் எந்த நாட்டிலிருந்தும், அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே இணையதளம் (www.kalaignarmarathon.com) மூலம் பதிவு செய்து, இம்மாரத்தானில் பங்கேற்க முடியும்.
வீட்டு மாடியில், தோட்டத்தில், ட்ரட்மில்லில் என எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், தங்களின் வசதிக்கேற்ப, உள்ளூர் பேரிடர் விதிகளுக்கு உட்பட்டு ஓடலாம். அதற்கான சான்றிதழ் இணையம் மூலமாகவும், பதக்கங்கள் அந்தந்த மாவட்டங்களிலும் வழங்கப்படும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள், தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. நுழைவுக் கட்டணமாக ரூ.300 பெறப்படுகிறது. இதில் கிடைக்கும் முழு தொகையும் கரோனா தடுப்பு நிவாரண நிதியாக, தமிழக முதல்வரிடம் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.