

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார்.
`உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலர்குமார் ஜெயந்த், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, நில நிர்வாக ஆணையர் நாகராஜன், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் வினய், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, எம்எல்ஏக்கள் வி.ஜி. ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, சுதர்சனம், டி.ஜெ.கோவிந்தராஜன், துரை சந்திரசேகர், ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்நிலைப் புறம்போக்கு, மேய்க்கால் புறம்போக்கு இடங்கள் நிறைய கண்டறிப்பட்டுள்ளன. இதனால், அங்கு குடியிருப்போருக்கு பட்டா வழங்குவதில் சிரமங்கள் உள்ளன. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்களுடன் இணைந்து பணிபுரியுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, வாரம் ஒருமுறை சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர்கள், பட்டா தவறு திருத்தப் பணியில் ஈடுபட வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
`உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் பெறப்பட்ட வருவாய்த் துறை தொடர்பான மனுக்களில், நத்தம் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வேண்டி அதிக மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, சட்ட சிக்கல்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜாதிச் சான்று
அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்றி, அங்கு அரசுக் கட்டிடங்கள் கட்டுவதற்காக வட்டாட்சியர், கோட்டாட்சியர்களுக்கு மாவட்டஆட்சியர் வாயிலாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இருளர் இன மக்களுக்கான சான்றிதழ்களை விரைவில் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.