

கும்மிடிப்பூண்டி தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கவும், சீரான ரயில் சேவை வழங்க கோரியும்பொன்னேரியில் ரயில்களை மறித்து பயணிகள் நேற்று பல மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இந்த தடத்தில் 4 மணி நேரம் ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 450 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் போதிய அளவில் மின்சார ரயில்களை இயக்குவதில்லை, காலதாமதமாக இயக்குவதாக பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையே, அதிருப்தியடைந்த பயணிகள் பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி நோக்கி புறப்பட்ட மின்சார ரயிலையும், சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்ல வேண்டிய மற்றொரு மின்சார ரயிலையும் திடீரென மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் இந்த மறியலில் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளுடன் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தை கைவிட மறுத்த பயணிகள், ரயில்வே கோட்ட அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டுமென தெரிவித்தனர். காலை 8.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.15 வரையில் இந்தப் போராட்டம் நீடித்ததால், இந்த தடத்தில் செல்ல வேண்டிய 5 விரைவு ரயில்கள், 4 மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், சுமார் 4 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளுடன் சென்னை ரயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் செந்தில், கூடுதல் மேலாளர் சச்சின் புனேதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் வந்துபேச்சுவார்த்தை நடத்தி, நிரந்தரதீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பிறகு இந்த தடத்தில் ரயில்கள் வழக்கம்போல் ஓடின.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சென்னை - கும்மிடிப்பூண்டி தடத்தில் நடைபெற்று வந்த புதிய பாதைகள் அமைக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளன. இருப்பினும், சில இடங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் விரைவில் நிறைவடையவுள்ளன. எனவே, இந்த தடத்தில் தேவையைக் கருத்தில் கொண்டு கூடுதலாக மின்சார ரயில்களை இயக்குவோம். இதேபோல், மின்சார ரயில்கள் தாமதம் இன்றி இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.