Published : 28 Mar 2014 12:00 AM
Last Updated : 28 Mar 2014 12:00 AM

திமுக செய்ததையே அதிமுக.வும் செய்துள்ளது: மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன் பிரத்யேகப் பேட்டி

மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர்களில் ஒருவர் டி.கே.ரங்கராஜன். இம்முறை அதிமுக தயவில் ராஜ்ய சபா எம்.பி. ஆனவர். மார்க்சிஸ்ட் கட்சி செயல்வீரர் கூட்டத்துக்காக கோவை வந்திருந்த அவர் ’தி இந்து’வுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி:

16-வது மக்களவைத் தேர்தல் களம் எப்படி இருக்கிறது?

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் சவால்களை முன்னிறுத்தி இருக்கிறது இந்தத் தேர்தல். காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாக உள்ள நிலையில் அவர்கள் உருவாக்கியிருக்கும் வேலையின்மை, ஊழல், விலைவாசி உயர்வு ஆகியவை பாஜக-வுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் இந்திய பெருமுதலாளிகள், வரலாறு காணாத அளவுக்கு சலுகைகளை, உ.பி. அரசாங்கத்திடமிருந்து பெற்றுவிட்டனர். இனி, காங்கிரஸ் வெற்றி பெறாது என்பதால் அவர்களைவிட நம்பகமான பாஜக-வை ஆதரிக்க கார்ப்பரேட் முதலாளிகள் முடிவெடுத்துவிட்டனர். பாஜக அலையை உருவாக்க முடியாது என்பதால் மோடி என்ற அலையை உருவாக்கப் பார்த்தனர். ஆனால் அப்படி எந்த அலையும் உருவாகவில்லை.

வடமாநிலங்களில் மோடி அலை வீசுவதாக பிரச்சாரம் செய்யப்படுகிறதே?

இந்தி பேசக்கூடிய பிராந்தியங்கள் தவிர வேறெங்கும் எந்த அலையும் இல்லை. மத்தியில் எந்த கூட்டணி ஆட்சி அமைத்தாலும் அதில் தங்களுக்கான இருக்கையை தக்கவைத்துக் கொள்ளத்தான் மாநிலக் கட்சிகள் கவனம் செலுத்துகின்றன. இந்தமுறை பாஜக-வின் பார்லிமெண்ட்ரி போர்டு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸே வேட்பாளர்களை தேர்ந்தெடுத்துள்ளது. இது அத்வானி, நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து மதவெறியை கிளப்பிவிட்டே மோடிக்கு வாரணாசியை ஒதுக்கியுள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரிய அளவில் மதக்கலவரங்களை தூண்டிவிட முன்னேற்பாடுகள் நடக்கின்றன. ஆனால், அதை இடதுசாரி ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள்.

அப்படியானால் இந்தி பேசும் மாநிலங்களில் மோடி அலை இருப்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

அப்படியும் சொல்ல முடியாது. தற்போது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருப்பதால் அப்படியொரு மாயை கற்பிக்கப்படுகிறது. ஆனால், குஜராத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த கல்லூரி தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் மாணவர் பிரிவு தோற்றுவிட்டது.

அங்கேயே இளைஞர்கள் மத்தியில் இந்த நிலை என்றால் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் இளைஞர்கள் நிலை என்ன? இருப்பினும் மோடி வாசமே இல்லாத இந்தப் பகுதிகளில் அங்கே மோடி அலை வீசுவதாக கற்பிதம் செய்கிறார்கள். மோடி அலை எங்கே வீசுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதை எப்படி உணர்கிறீர்கள்?

1964-ல் கம்யூனிஸ்ட் கட்சி உடைந்த பிறகு இரு கட்சிகளும் இணைந்து நின்று சந்திக்கக்கூடிய தேர்தலாக இது இருக்கிறது. இது இரு கட்சிகளுக்கும் மத்தியில் எழுச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கம்யூனிஸ்ட் தோழர்கள் தவிர அதன் ஆதரவாளர்கள், நடுநிலையாளர்கள் நாங்கள் எடுத்துள்ள முடிவை ஏற்று உற்சாகமாகப் பணியாற்றுவதை அரங்குகளில் காணமுடிகிறது.

அதிமுக ஆதரவில் ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட நீங்கள், கடைசி நேரத்தில் ஜெயலலிதா இடதுசாரிகளை கழற்றிவிட்டது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

இதில் நினைப்பதற்கு ஏதுமில்லை. தாம் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தார் ஜெயலலிதா. அது எப்போதுமே சாத்தியமில்லை. 1998-ல் திமுக செய்ததை இப்போது அதிமுக செய்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x