

கடந்த 10 நாட்களில் 54,653 சிறு வணிகர்களுக்கு ரூ.27 கோடியே 32 லட்சம் கடன் தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2-ம் தேதி வரை முகாம் நடக்கும் என முதல்வர் ஜெயலலிதா முன்பு அறிவித்திருந்தார். பின்னர், வணிகர்களின் வேண்டுகோளை ஏற்று, 5-ம் தேதி வரை முகாம்களை நீட்டிக்க உத்தரவிட்டார். இதன்படி, தமிழகம் முழுவதும் நேற்றும் சிறப்பு முகாம்கள் நடந்தன. இன்றும், நாளையும் தொடர்ந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த 10 நாட்களில் 5,186 முகாம்கள் நடத்தப்பட்டு, 3 லட்சத்து 17 ஆயிரத்து 35 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்த 54,653 சிறு வணிகர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.27 கோடியே 32 லட்சம் கடன் தொகை அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று (நேற்று) நடந்த முகாம்களுக்கு கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரித்து அனுப்பப்பட்டனர். இவர்கள், ஏற்கெனவே பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்தனர். விண்ணப்பிக்காத சிறு வணிகர்களிடம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பெற்று, கடன் வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.