ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய சோதனைக் காலம் இது: திருச்சி சிவா

திருச்சி சிவா எம்.பி: கோப்புப்படம்
திருச்சி சிவா எம்.பி: கோப்புப்படம்
Updated on
1 min read

ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய சோதனைக் காலம் இது என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார்.

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை நேரில் சந்திக்கத் திட்டமிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று, அவர்களுக்குத் தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் இன்று (ஆக. 06) விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட திமுக, தேசிய மாநாட்டு கட்சி, சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் என, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதில், திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டார்.

இதையடுத்து, திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாடாளுமன்றத்தில் எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றும்போதும், அதனை நிலைக்குழுவுக்கு அனுப்புவதில்லை, விவாதிப்பதில்லை, இந்தியா கண்டிராத மோசமான நிலைமை இது.

இத்தனை நாட்களாக 3 பிரச்சினைகளைத்தான் விவாதிக்குமாறு வலியுறுத்தி வருகிறோம். வேளாண் சட்டங்கள், பெகாசஸ், விலைவாசி உயர்வு ஆகியன. மத்திய அரசு எதிர்க்கட்சிகளை மதிப்பதில்லை. நாடாளுமன்ற நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை. ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய சோதனைக் காலம் இது" எனத் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in