

இந்தியாவில் பல மாநிலங்கள் நக்சலைட் பிடியில் சிக்கியுள்ள நிலையில், தமிழகத்தில் நக்சலைட் ஊடுருவல் இல்லை என்பது பெருமை அளிக்கிறது என முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி போன்ற மாவட்டங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் நக்சலைட் பிடியில் சிக்கியிருந்தன. 1978-ம் ஆண்டு திருப்பத்தூரைச் சேர்ந்த அப்பாசாமி ரெட்டியார், பொன்னேரியைச் சேர்ந்த கேசவன், கதிரம்பட்டியைச் சேர்ந்த நடேசன் ஆகியோர் நக்சலைட் தாக்குதலுக்கு உயிரிழந்தனர். நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த தமிழ்வாணன் தலைமையில் சிவலிங்கம், மகாலிங்கம், நொண்டி பழனி உள்ளிட்ட பலர் திருப்பத்தூரில் பதுங்கியிருந்து 3 மாவட்டங்களைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.
இந்நிலையில், 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலை கிராமத்தில் சுற்றித்திரிந்த 4 பேரை ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளராக இருந்த பழனிச்சாமி பிடித்தார். இதைத் தொடர்ந்து, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்டவர்களில் ஒருவர் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த முக்கியப் புள்ளி சிவலிங்கம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட நக்சலைட்களை காவல்துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது வெடிகுண்டு வீசப்பட்டு காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, காவலர்கள் முருகேசன், ஏசுதாஸ் மற்றும் ஆதிகேசவலு ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த சிவலிங்கம் மட்டும் தப்பியோடினார்.
நக்சலைட் தாக்குதலில் உயிர் நீத்த காவலர்களுக்குக் கடந்த 1980-ம் ஆண்டு திருப்பத்தூர் நகரில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் பங்கேற்று, சவ ஊர்வலத்துடன் நடந்து சென்றார்.
இதைத்தொடர்ந்து, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6-ம் தேதி உயிர்த் தியாகம் செய்த காவலர்களுக்குத் திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்தில் ‘வீர வணக்கம்’ அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன்படி, 41-வது வீர வணக்கம் நினைவஞ்சலி நிகழ்ச்சி திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் தலைமை வகித்தார். வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து, ஐஜி சந்தோஷ்குமார், டிஐஜி பாபு, மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி ஆகியோர் உயிர்த் தியாகம் செய்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு 30 குண்டுகள் முழங்கக் காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஓய்வுபெற்ற தமிழக டிஜிபி வால்டர் தேவாரம் உடல் நலக்குறைவால் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை, இருப்பினும் காணொலிக் காட்சி மூலம் அவர் கலந்துகொண்டு பேசியதாவது:
‘உலகத்திலேயே, உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு இது போன்ற வீர வணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி எங்குமே நடத்தப்படுவதில்லை. முதலாம் உலகப்போர், 2-ம் உலகப் போர்களில் கூட உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தற்போது வரை நடத்தப்படுவதில்லை.
ஆனால், திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டுமே நக்சலைட் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த 4 காவலர்களுக்கு, அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தொடர்ந்து 41 ஆண்டுகளாக வீர வணக்கம் அஞ்சலி செலுத்தி வருவது காவல்துறைக்கே பெருமை சேர்ப்பதாக உள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போதும் நக்சலைட் ஊடுருவல் காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புகூட சிஆர்பிஎப் வீரர்கள் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் நக்சலைட் நடமாட்டம் காணப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் நக்சலைட் ஊடுருவல் இல்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இருந்தாலும் தமிழகக் காவல் துறையினர், க்யூ பிரிவு காவல் துறையினர் மாநில எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும். தமிழகம் எப்போதும் அமைதிப் பூங்காவாக இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டும். உடல்நலக் குறைவு காரணமாக இந்த நிகழ்ச்சியில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் நிகழ்ச்சியில் கட்டாயம் நான் கலந்து கொள்வேன்’’.
இவ்வாறு முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், க்யூ பிரிவு எஸ்.பி. கண்ணம்மாள், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), தேவராஜ் (ஜோலார்பேட்டை), திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம், எஸ்.பி. தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பழனி, நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி, பொதுமக்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.