Last Updated : 06 Aug, 2021 03:09 PM

 

Published : 06 Aug 2021 03:09 PM
Last Updated : 06 Aug 2021 03:09 PM

விவசாயிகளின் சிரமங்களை போக்க விரைவில் திட்டங்கள்: புதுச்சேரி அமைச்சர் தேனி சி.ஜெயக்குமார்

புதுச்சேரி மாநிலத்தில் விவசாயிகளின் சிரமங்களை போக்கும் வகையிலான திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் தேனி சி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் சமூக வலுவூட்டல் முகாம், காரைக்கால் அம்மையார் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் இன்று(ஆக.6) நடைபெற்றது. புதுச்சேரி சமூக நலத்துறை, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்திக் கழகம் மூலம் (அலிம்கோ) மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதில் புதுச்சேரி வேளாண் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் தேனி சி.ஜெயக்குமார், போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு, 173 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலி, காது கேட்கும் கருவி, மூன்று சக்கர வாகனம், வாக்கிங் ஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை வழங்கினர்.

மேலும், காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக 1,500 பயனாளிகள் மாதம் தோறும் முதியோர் உதவித்தொகை பெறும் வகையில், அதற்கான அடையாள அட்டையை பயனாளிகள் சிலருக்கு அமைச்சர்கள் வழங்கினர். மீதமுள்ள பயனாளிகளுக்கு அந்தந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களால் பின்னர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.சிவா, எம்.நாக தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், சமூக நலத்துறை இயக்குநர் பிரபாவதி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் அசோகன், மாவட்ட சமூக நலத்துறை உதவி இயக்குனர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் தேனி சி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: ”புதுச்சேரி அரசு மக்களுக்கான அரசு. விவசாயிகள் கஷ்டத்திலும், நஷ்டத்திலும் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் கூறியுள்ளார். அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு கூடிய விரைவில் அறிவிக்கப்படும். பாப்ஸ்கோ, பாசிக் நிறுவனங்களை திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக மத்திய அரசை நாடி உள்ளோம். முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும். காரைக்கால் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x