கோயில் நிலங்கள் வழக்கு; இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த விவரங்களை முழுமையாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்யும் வரை, அவற்றை குத்தகைக்கு விடுவது, குத்தகையை புதுப்பிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது எனக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலைய துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதரன் தாக்கல் செய்த மனுவில், ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்பதற்காக, கோயில்களுக்கு சொந்தமான சொத்து விவரங்கள் இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக, பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன எனவும், இருப்பினும் இணையதளத்தில் தேடும்போது அந்த விவரங்கள் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நிலங்கள் குறித்த ஆவணங்கள் இல்லாததால், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க கோயில் நிர்வாகங்களால் இயலவில்லை எனவும், கோயில்களுக்கு நிலங்கள் தானமாக கொடுக்கப்பட்ட விவரங்கள், அங்குள்ள கல்வெட்டுக்களில் இடம்பெற்றிருக்கும் என்பதால், அவற்றை பதிவு செய்து வெளியிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த விவரங்களை முழுமையாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்யும் வரை, அவற்றை குத்தகைக்கு விடுவது, குத்தகையை புதுப்பிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என, அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை இன்று (ஆக. 06) விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, மனுவுக்கு எட்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in