அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மதுசூதனன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மதுசூதனன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Updated on
1 min read

மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அதிமுகவின் அவைத் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன், கடந்த சில மாதங்களாக வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக, வீட்டிலும் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். சில மாதங்களுக்கு முன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், பின் மெல்ல உடல்நலம் தேறினார். பின், கடந்த மாதம் அவருடைய உடல்நலம் மோசமடையவே, சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த இரு தினங்களாக அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில், நேற்று (ஆக. 05) மாலை மதுசூதனன் (81) காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரது உடல், தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் உள்ளிட்டோருடன் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் உள்ளிட்டோருடன் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோருடன் வந்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மதுசூதனன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர், ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோருடன் அருகருகே அமர்ந்து சிறிது நேரம் உரையாடினார். பின்னர் அங்கிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.

மதுசூதனன் உடல் இன்று மாலை மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in